யட்சி

  • 8.3k
  • 2.4k

சி ன்னப் பெண்ணாக இருந்தபோது அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்ன வயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லி மரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்த ஒலி.'யட்சி அழகா, அம்மா?''பின்னே? ரொம்ப ரொம்ப அழகு, அழகுனு சொன்னாப் போறுமோ? பெண்ணழகே அவதான்னு வை...'உன்னை மாதிரியா அம்மா?''போடா.'தலையைத் தட்டிய கை அப்படியே வருட ஆரம்பித்தது. தொழுவில் சிவப்பிப் பசு சடசடவென்று கல்தளம்மீது கால்மாற்றியது.எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்க முடியும். அப்பருவத்தில்கூடச் சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில்கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம்நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஓர் உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம்.