கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த சுமங்கலி பாட்டியின் முகத்தில், காதில் மின்னிய தண்டட்டியின் ஒளியில் கடந்த காலத்தின் பெரும் துயரமும், தியாகத்தின் பெருமையும் கலந்திருந்தன.
கர்ப்பிணியாக இருந்த தன்னைத் தவிக்கவிட்டு, நேதாஜியின் பாதையைப் பின்பற்றி நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த கணவரின் நினைவுகள், அவள் முண்டச்சி வரி கட்ட நிலத்தை விற்ற அந்தப் போராட்டமான காலத்தை அந்த காட்டிலேயே வேலை பார்த்து மீண்டும் முண்டச்சி வரி கட்டி தன் மகளுடன் வரும் வருமானத்தில் ஜீவனம் நடத்தியதும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.
ஆனால், காலம் மாறியது. முண்டச்சி வரி நீங்கியது. பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், மலையின் அமைதியில் அவரது கணவரையும் நினைத்து அந்த நினைவுகளைச் சுமந்து பாட்டியின் வாழ்வு நகர்ந்ததாலும், அவரது மகள் லெட்சுமிக்கு விடிவு கிடைக்கவில்லை. லெட்சுமி, வாழ்க்கையின் வலிகளைத் தாங்கிக் கொண்டவள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனால் மீண்டும் செல்வத்தை இழந்து, குடும்பத்தைக் காக்க மலையிலிருந்து கீழே உள்ள நகரச் சந்தைகளுக்குப் பூக்களைக் கட்டி விற்று ஜீவனம் நடத்தினாள். அவள் இப்போது தனியாகப் பூ கட்டி நகரச் சந்தைக்கு விற்கிறாள்.
லெட்சுமியின் மகள்தான் பாரதி. கல்விக் கடவுளின் பெயரான பாரதி, குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளிக்கூடத்தை விட்டு விலகி, தாயுடன் பூக் கட்டும் தொழிலுக்கு வந்துவிட்டாள். எனினும், அவளுக்கு வாசிப்பதில் அலாதி பிரியம். எங்கு கண்டாலும் எழுத்து கூட்டிப் படிப்பது, புதிய வரலாறுகளைத் தெரிந்துகொள்வது என அவளது அறிவுத் தேடல் அணையாமல் இருந்தது. இருப்பினும், கொல்லிமலையின் வெகுளியான சூழலில் வளர்ந்த அவள், உலக ஞானம் அதிகம் அற்றவள்.
அன்றைய தினம், பாரதி மலைப்பூக்களைக் கட்டி முடித்துவிட்டு, வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தாள். மலையடிவாரத்தில் இருந்து வந்திருந்த இரண்டு சிறுவர்கள், ஒரு நாய் குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தனர். அங்கிருந்த நாய்கள் குட்டி ஈன்றிருந்ததை பாரதி அறிவாள். "அக்கா, இந்தப் பட்டுப் போன்ற நாய்க்குட்டியைப் பத்து பணத்திற்குத் தர்றோம், வாங்கிக்கோ" என்றனர் சிறுவர்கள். "மலையிலே திரியும் தெருநாய் குட்டி" என்று கூட அறியாத அந்த வெகுளி பாரதி, பணத்தைக் கொடுத்து அதை வாங்கினாள். அன்று முதல், அவள் கட்டி முடித்த பூக்களின் வாசனையில், அந்த நாய்க்குட்டியுடன் விளையாடுவதுதான் அவளது இப்போதைய மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாறியது.
பாரதிக்கு இப்போது திருமண வயது நெருங்குகிறது. மலையின் சத்துள்ள உணவால், நல்ல வாளிப்பான உடல்தேகமும், களையான முக அழகும் கொண்டவள். மலையின் மேகமூட்டம் போல, தாய் லெட்சுமியின் மனதில் கவலை சூழ்ந்தது. "மகளை வெளியில் அனுப்பக் கூடாது, நகரச் சந்தைக்குப் பூ விற்கவும், மலைகாடுகளில் பூ பறிக்கவும் கூட என்னுடன் தான் வரவேண்டும்" என்பதில் உறுதியாக இருந்தாள். தன் குடிகாரக் கணவனால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று பயந்தாள். மேலும், மலைப்பாதை சவாலானது.
வீட்டிலேயே, பாட்டியுடன் அமர்ந்து கதைகளைக் கேட்டுக்கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்து, அக்கம் பக்கத்துச் சிறுமிகளுடன் தாயக்கட்டை, பல்லாங்குழி என இருந்த அவளது உலகம், இப்போது அந்த நாய்க்குட்டியின் வரவால் சற்றே மாறத் தொடங்கியது. கொல்லிமலையின் பசுமைக்கும், அதன் நிசப்தத்திற்கும் இடையில், ஒரு சிறு நாய்க்குட்டியின் துணையோடு அவளது இளமைக்காலம் வேறு ஒரு திருப்பத்தை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கிறது.
அன்றைய தினம், லெட்சுமிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனது. கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் அவளைப் படுக்கையில் தள்ளியது. "ஐயோ, இன்றைக்கு ஜீவனம் அவ்வளவுதானா? குடிகாரக் கணவன் ஒரு பயனும் இல்லையே" என்று புலம்பினாள் லெட்சுமி.
பூக்கட்டாமல் விட்டால் அன்றாட உணவுக்கு வழியில்லை. வழக்கமாகப் பாட்டியின் கதைகளைக் கேட்டுக்கொண்டு, நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த பாரதியின் மனதில் ஒரு பெரிய சுமை இறங்கியது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும், வரலாற்றை அறிவதில் ஆர்வம் கொண்ட அவளுக்குச் சூழ்நிலையின் நிதர்சனம் புரிந்தது. தனது வெகுளித்தனத்தை உதறி, மனதை திடப்படுத்திக் கொண்டாள்.
"அம்மா, கவலைப்படாதே. நானே இன்று காட்டுக்குப் போய் பூக்களைப் பறித்து வருகிறேன். நீ படுத்து ஓய்வெடு" என்றாள்.
லெட்சுமி பதறினாள். "வேண்டாம் பாரதி, நீ இன்னும் சின்னப் பொண்ணு. இந்தக் காட்டுப் பாதையில் தனியா போகக் கூடாது. உன் அப்பாவையும் நம்பி விட முடியாது."
"இல்லைம்மா. எனக்குத் தெரியும். நான் சீக்கிரமே வந்துடுவேன். குட்டி நாயை வீட்டுல விட்டுட்டுப் போறேன். நான் பூ பறிக்கப் போகிற வழியில் எதுவும் ஆபத்து வராது. நீ கவலைப் படாதே" என்று தாயைச் சமாதானப்படுத்தினாள் பாரதி.
தன் நாய்க்குட்டியின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, வீட்டு வாசலில் இருந்த பெரிய மூங்கில் கூடையை எடுத்துக் கொண்டாள். தாயின் பயத்தையும், தந்தையின் பொறுப்பற்ற தன்மையையும் உணர்ந்த அவள், முதல் முறையாக வீட்டைவிட்டுத் தனியாக வெளியேறினாள்.
கொல்லிமலையின் அடர்ந்த காட்டுக்குள், பூ பறிக்கச் சென்ற பாரதியின் இளம் காலடிச் சுவடுகள், அவளது வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு திருப்பத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் அடியாகும். காட்டுப் பாதையில் நுழைந்த அவள், தன் தாய்க்காக அன்றைய ஜீவனத்தைத் தேடத் தொடங்கினாள்.
(காட்டிற்குள் பாரதிக்கு என்ன நடந்தது? அவள் பாதுகாப்பாக பூக்களைப் பறித்துத் திரும்பினாளா? அல்லது இந்த பயணம் அவளது வெகுளித்தனமான உலகத்தைப் புரட்டிப் போட்டதா?)