Yatsi books and stories free download online pdf in Tamil

யட்சி

சி ன்னப் பெண்ணாக இருந்தபோது அம்மா யட்சியைப் பார்த்திருக்கிறாள். சின்ன வயதில் என்னை மடியில் போட்டுக் கொண்டு கதை சொல்லும்போது அவளே சொல்லியிருக்கிறாள். தோட்டத்து நெல்லி மரத்தின் நிலாநிழல் வாசல் வழியாக உள்ளே பரப்பிய வலையில் நானும் அவளும் தனித்திருந்தோம். காற்றில் வலை அலைவுற்றது. வெகு தொலைவில் திற்பரப்பு அருவி சீறிக்கொண்டிருந்த ஒலி.

'யட்சி அழகா, அம்மா?'

'பின்னே? ரொம்ப ரொம்ப அழகு, அழகுனு சொன்னாப் போறுமோ? பெண்ணழகே அவதான்னு வை...

'உன்னை மாதிரியா அம்மா?'

'போடா.'

தலையைத் தட்டிய கை அப்படியே வருட ஆரம்பித்தது. தொழுவில் சிவப்பிப் பசு சடசடவென்று கல்தளம்மீது கால்மாற்றியது.

எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்க முடியும். அப்பருவத்தில்கூடச் சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில்கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம்நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஓர் உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக் கணங்களையே நீட்டி முடிவற்ற காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி - அம்மா சொன்னாள்.

'நீ எப்ப அம்மா அப்படி அழகா இருந்தே?"

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்கொண்டு அந்த பயத்தை வென்றேன். என் அம்மாவேதான். ஆமாம். திடமாக, மென்மையாக அருகே இருக்கும் அறிமுகம் மிக்க உடல்.

'அம்மா.

'ஏண்டா?'

'ஏன் எல்லாரும் யட்சியைப் பாத்துப் பயப்படறங்க? அவதான் அழகா இருக்காளே?'

'அழகா இருந்தா பயப்படாம இருப்பாங்களா?'

'ஏம்மா?'

'போ. போய்ப் படு. பனி விழுது...

'உன் அம்மாவே ஒரு யட்சியில்லா?' பெரியம்மா சொன்னாள் பிறகு. 'அப்பல்லாம் இப்ப மாதிரி இல்ல. நாங்கள்லாம் பயந்து பயந்து சாவோம். அப்பா பெருந்திண்ணையில் இருந்தா பனைவிசிறிச் சத்தம் கேக்கும். அப்ப அந்தச் சத்தம் மட்டும்தான் வீட்டில் கேக்கும். சின்ன வயசில நான் அப்பாவைப் பாத்ததே இல்லை தெரியுமா? கதவிடுக்கு வழியாப் பாத்து பாத்து அவருக்க முதுகும் புறந்தலையும் மட்டும்தான் எனக்குத் தெரியும். உன் அம்மா அப்பிடியா? நான் நான்னு நிப்பா. படமெடுத்த பாம்பு மாதிரில்லா தலை திருப்புவா. வேணும்னாவேணும். வேண்டாம்னு ஆராவது சொன்னா சொல்றவங்களைக் கொல்லணும். அப்படி ஒரு பிடிவாதம். அப்பத்தான் வெல்வெட் துணி வந்தது. ஜம்பர் தைக்கணும்னு கேட்டா. 'ஆமா, வெல்வெல்ட்டும் வெளிச்சமும். போடி வெவஸ்தகெட்ட குடியால்ல போச்சு'னு அப்பா சொல்லிட்டார். சரசரன்னு போயி தேங்காப் புரையில உக்காந்திட்டா. 'வேணும்னா வந்து சாப்பிடுவா. விடுடீ'னு அப்பா சொல்லிட்டார். எங்கம்மா பயந்துபோய் உள்ள உக்காந்து அழுதா. அத்தை மட்டும் போயி 'வாடி செம்பகம்... வெளையாடாதே... நான் உனக்கு எப்படியாவது வாங்கித் தாரேன்'னு சொல்லி காலைப் பிடிச்சா. அப்படியே உக்காந்திருக்கா, முடிப்புரை பகவதி மாதிரி முடியைப் பிரிச்சுப் போட்டு... மஷனுப் பார்வை இல்ல. இருட்டிப் போச்சு. 'மக்கா உள்ள வாடீ... இருட்டு வந்தாச்சு'னு அம்மா கண்ணீர் விட்டா. அசையணுமே. அப்படி ஒரு இருப்பு. மண்விளக்கு ஏத்தி வெச்சு அத்தை காவலுக்கு இருந்தா. காலம்பற அப்பா தொழுத்து பாக்க வந்தார். இவ இருக்கிற இருப்பைப் பார்த்தார். கோவம் வந்தா அவரு சொடலைமாடன் பூசாரி மாதிரி ஆராசனை கேறி ஆடுவார். 'கள்ள நீலி'ன்னு கத்திக்கிட்டு அரிவாளைத் தூக்கிட்டு துள்ளிச் சாடி வந்தார். அத்தையும் அம்மையும் ஓடிப்போய் காலில் விழுந்தாங்க. ஆளுக்கொரு எத்து. நேரா தேங்காப் புரையில ஏறி 'சாவுடீ'னு ஒரே வெட்டு, விரக்கடை வித்தியாசப்பட்டு வெட்டு தூணில பட்டுது. இவ ஒரு இமை அசைக்கணுமே. அப்படியே இருக்கா. அப்பாவுக்கு சங்கு பதறிப்போச்சு. கையும் காலும் கெடந்து துடிக்குது. அப்படியே சிவந்த கண்ணைத் திருப்பி ஒரு பார்வை பாத்தா. 'அம்மா பகவதி தேவினு கத்திக்கிட்டு வெளியே ஒடிப்போய் திண்ணையில விழுந்தவரு. எட்டு நாள் ஒரே பொலம்பல். பிறவு அவளை ஏறிட்டுப் பார்க்கமாட்டார். கேட்டா கேட்டது கிடைக்கும்... அப்படி இருந்தா... யட்சியில்லா அவ? செம்பக மரத்து யட்சிக்கு தங்கச்சில்லா?" செம்பக மரத்து யட்சி, அம்மாவின் குடும்ப வீட்டின் அருகே நீலகண்டசாமிக் கோயில் குளத்துக்கும் அவர்களுடைய தோட்டத்துக்கும் நடுவே நின்ற பெரிய செண்பக மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. கல்பீடம்மீது கல்லால் செய்யப்பட்ட சிறு விளக்கு. அதுதான் பிரதிஷ்டை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பலியும் பூஜையும் உண்டு. மற்ற நாட்கள் முழுக்க சருகு மூடி, காற்றில் இலைகள் கீறும் ஒலியோடு தனிமையில கிடக்கும் கல்வடிங்கள்.

எனக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தபோது குலதெய்வக் கோயிலில் மொட்டை போட்டுக் காது குத்தி, உடனே யட்சிக்கும் ஒரு பலி போட்டுவிடலாம் என்று சண்முக மாமா சொன்னார். 'அன்று சருகுகளையெல்லாம் அள்ளி விலக்கி யட்சிபீடம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. தேங்காய் எண்ணெய் விட்டு தீபத்தை ஏற்றியபோது கரிய கூந்தலைக் காற்றில் சுழற்றி யட்சி நின்றாடுவதுபோலத்தான் இருந்தது. காது வலியை மறந்து கனகா வாழைப்பழத்தைத் தின்றபடி விழித்துப் பார்த்தது.

'பண்டு நம்ம மூத்த பாட்டா ஒருத்தர் திருவனந்தபுரம் தாண்டி ஏவாரத்துக்கப் போனப்ப... ஒரு காட்டில பாறைமேல கைப்பொதியை வெச்சார். அதுல பொன்னிருந்தது. பாறையில குடியிருந்த வனயட்சி பொன்னுக்கு ஆசைப்பட்டுக் கூடவே வந்துட்டா. இங்கே வந்து ஒரே அட்டகாசம். பசுவையும் கன்னையும் பயமுறுத்துறது. ராத்திரி வழிநடக்கிறவங்களைக் குழப்பிச் சுழற்றியடிச்சு சுடுகாட்டில் கொண்டுபோய் விடுறது... மந்திரவாதி வந்து பாத்து யட்சி வந்திருக்க விஷயத்தைச் சொன்னாரு, பவுனு குடுத்து நிறையுமா? பத்து பவுன் வெச்சு கும்பிட்டா யட்சி பத்து நூறு பவுன் கேப்பாளே? பின்ன, பொன்னிருக்க இடத்தில் பூவுனு ஒரு சொல்லுண்டில்லா? அதனால் இங்க ஒரு தங்கச் செம்பக மரத்தில யட்சியை ஆவாகனம் பண்ணி பிரதிஷ்டை செய்தாச்சு. தங்கச் செம்பகப்பூவைப் பாத்துப் பொன்னுனு நினைச்சு யட்சியும் இங்கே இருந்துபோட்டா.

பூசாரி பொங்கல் படைத்து, கமுகம் பூவும் அரளிப்பூ மாலையும் சார்த்தி, யட்சிக்குப் பூசை செய்தார். சுடர் படபடத்தது. காற்றில் பொற்காசுகள்போலச் செண்பக மலர்கள் உதிர்ந்தன. மாமா ஒரு துளி பொங்கலை எடுத்து கனகுவின் வாயில் வைத்தார். அவள் பழத்தை நழுவவிட்டு மாமாவின் கையைப் பிடித்தாள். வாய் கொழகொழவென்று ஒழுகியது.

'பெண் பிள்ளைன்னாக்க அதுக்கு ஒரு யட்சி கிருபை வேணும் பாத்துக்க. அது ஒரு பெலமாக்கும். கண்ணில் ஒரு தீ இருக்கும்... மாமா சொன்னார். 'உனக்கு அம்மை வந்து நின்னு செய்ய வேண்டிய பூசை. அவ இந்த வீட்டுப் படியெறங்கி வருஷம் முப்பதாவுது... அவ சொன்னா சொன்னதுதான். வேளிமலை மறிஞ்சாலும் நெனைச்ச நெனைப்பு மறியமாட்டா...'

அதைப் பற்றி அம்மா சொன்னதில்லை. ஆனால், பிற அத்தனை பேரும் ஏதோ ஒரு தருணத்தில் சொல்லியிருக்கிறார்கள். அம்மாவின் இளைய அண்ணா இசக்கிமுத்துப் பிள்ளை சர்வேயராக கேரளத்து மலையோரத்துக் கிராமம் ஒன்றுக்குப் போனார். அங்கேயே அவருக்கு கம்யூனிஸ்டு உறவு ஏற்பட்டது. ஊருக்குத் திரும்பி முழுநேர கம்யூனிஸ்டுப் பிரசாரகர் ஆனார். அம்மா அவரது சீடப்பெண் மாதிரி. அவர் படித்த புத்தகங்களையெல்லாம் அம்மாவும் படிப்பாள். அவர் பேசும்போது கதவோரம் நின்று இரு சுடர்கள்போலக் கண்கள் ஒளிரக் கேட்டிருப்பாள். கட்சி தடை செய்யப்பட்டபோது பல முக்கியத் தோழர்கள் அவர்கள் வீட்டில் வந்து தலைமறைவாகத் தங்கியிருந்தார்கள். அண்ணாவின் நடவடிக்கைகள் பற்றி அவரது அப்பாவுக்கு ஒன்றுமே தெரியாது. சரியான கிராமத்து மனிதர். வருபவர்கள் அண்ணாவின் நண்பர்கள் என்றே நம்பியிருந்தார். இரவில் சாய்ப்பு அறையில் அவர்கள் சிமினி விளக்கை வைத்துக் கொண்டு விடிய விடியப் பேசுவார்கள். சாய்ப்பை ஒட்டி உள்ளறை இருந்தது. அதன் சன்னலில் ஒரு சிறு துளை. இருட்டும் ஒட்டடையும் எலிகளும் கரப்பாம்பூச்சிகளும் நிரம்பிய அந்த இடுங்கிய அறைக்குள் இரவு முழுக்க நின்றபடி அம்மா கேட்டுக் கொண்டிருப்பாள். போலீஸ் கெடுபிடிகள் அதிகரித்தபோது அவர்கள் முகாமை மாற்றிக்கொண்டார்கள். விரிந்து பரந்த பல கிலோமீட்டர் பரப்பை நிரப்பிய மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்தின் நடுவேயுள்ள சிறிய ஓலைக் குடிலுக்கு. அங்கு குடில் இருப்பதை மிக நெருங்கினால் மட்டுமே பார்க்க முடியும்.

அன்று மாலை இ.எம்.எஸ்.2 வருவதாக அம்மாவிடம் அண்ணா சொன்னார். அவர் மூன்று நாள் ஊரில் தலைமறைவாக இருக்கப் போகிறார். அம்மா அவர் எழுதிய எதையுமே படித்தது. இல்லை. அவரது படத்தையும் பார்த்ததில்லை. ஆனால், எல்லா விவாதங்களிலும் அந்த மூன்று எழுத்துக்கள் உச்சரிக்கப்பட்டன. மதிப்புடன், பிரமிப்புடன், ஆவேத்துடன். அன்றிரவு அம்மா வீட்டை விட்டு இறங்கி, கோயிலைத் தாண்டி, ஆற்றில் இறங்கி, மறுபக்கம் சென்று, மனித சஞ்சாரமே இல்லாத காட்டுப் பாதையில் நடந்து, மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் நடந்து இ.எம்.எஸ். இருந்த குடிலை அடைந்தாள். உள்ளே தூக்கிக் கட்டிய மரக் கட்டில்மீது இ.எம்.எஸ். அமர்ந்திருந்தார். இருளில் அவர் காலடியில் ஏழெட்டுத் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். கண் பழகியபிறகே அவரது குறுகிய உடலையும் இரட்டை மண்டையையும் அம்மா அடையாளம் கண்டாள். மெல்லிய குரலில் திக்கித் திக்கி அவர் பேசிக் கொண்டிருந்தார். உலகப் போருக்குப்பிறகு உலகவரலாற்றின் திசை எப்படி மாறிவிட்டது என்றும், வரும் யுகத்தில் உழைப்பு எப்படி ஓர் அடிப்படைச் சக்தியாக மாறி அரசியலை ஆட்டிப் படைக்கும் என்றும்.

விடியும்வரை குடிசைக்கு வெளியே நின்று கேட்டுவிட்டு அம்மா திரும்பினாள். திரும்பும்போது வழி தவறிவிட்டாள். மரவள்ளி இலைகளின் கடலுக்குள் பல மணி நேரம் அலைந்தாள். விடிந்து ஒளி வந்தபிறகு அவளை பனை ஏறச் சென்றவர்கள் கண்டுபிடித்துக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அது யட்சியின் வேலை என்று அம்மாவின் அப்பாவும் அம்மாவும் பிறரும் நம்பினர். அம்மாவின் அத்தைக்கும் குட்டித் தம்பியாக இருந்த சண்முக மாமாவுக்கும் மட்டுமே விஷயம் தெரிந்திருந்தது. அந்த மாதமே அம்மாவின் திருமணம் நடந்தது. அதை ஒரு கட்டாயக் கல்யாணம் என்று வீட்டுக்கு வெளியே எவரும் அறியவில்லை. அறிந்தாலும் ஒன்றும் பிரச்னை இல்லை. அன்று எல்லாக் கல்யாணங்களும் கட்டாயக் கல்யாணங்கள்தாம். அம்மாவின் அம்மா உத்திரத்தில் சுருக்கைக் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு நிற்பதை கதவிடுக்கு வழியாகப் பார்த்து அம்மா கத்தினாள். கதவை உடைத்துத் திறந்து உள்ளே போய் அம்மா அவள் காலைப் பிடித்துக் கதறியபடி கல்யாணத்துக்குச் சம்மதித்தாள். ஆனால், அந்த வஞ்சத்தை அம்மா மறக்கவில்லை. தன் அம்மாவும் அப்பாவும் இறந்தபோது மட்டும்தான் பிறந்த வீட்டுக்கு வந்தாள்.

போகும்போது மட்டும் எப்படி வழி தெரிந்தது என்று சண்முகம்

மாமா கேட்டபோது, யட்சி வழிகாட்டிக் கூட்டிச் சென்றதாக

அம்மா சொன்னாளாம். வெகு நாள் அவரும் அதை

நம்பியிருக்கிறார். அம்மா சொல்வது அத்தனை தத்ரூபமாக

இருக்கும். எப்போது முதலில் யட்சியைப் பார்த்தாள் என்று

நான் கேட்டேன். நீலகண்டசாமி கோயிலில் நாடகம் பார்க்கப்

போனபோது என்றாள்.
வருடம்தோறும் நீலகண்டசாமி கோயிலில் பாட்டும் நடனமும்தான் இருக்கும். அன்று வள்ளியூர் சிவசண்முகம் குழுவினரின் ஸ்பெஷல் நாடகம் 'தட்சயாகம்' போட்டிருந்தார்கள். ஊரே திரண்டு நாடகம் பார்க்கப் போயிற்று. அம்மாவின் அப்பா பெண்களையெல்லாம் வீட்டுக்குள் தள்ளி வெளியே பூட்டிவிட்டார். அவருக்கு நாடகம் பிடிக்காது. நாடகமென்ன, எந்தக் கலையுமே பிடிக்காது. நாடகம் தொடங்க நள்ளிரவாகிவிட்டது. அம்மா மச்சுக்கு ஏறி ஓட்டுக் கூரையைப் பிரித்து வெளியேறி, நடந்து, புளியமரக் கிளையில் தொற்றி ஏறி, இறங்கி கோயிலைப் பார்க்கச் சென்றாள். குளத்துக்கு இந்தப் பக்கம் அவர்களுடைய தோட்டத்துக்குள் நின்ற கூழைப்பலா மரத்தில் ஏறி, ஒரு கிளையில் அமர்ந்து, நாடகம் பார்த்தாள். அப்போது பக்கத்தில் செண்பக மரத்தின் கிளையில் ஓர் அழகிய இளம்பெண் இருப்பதைப் பார்த்தாள். அது செண்பக யட்சி, யட்சியின் தலைமயிர் கருமையான நீரோடைபோலப் பளபளத்து வழிந்து வெகு நீளத்துக்கு காற்றில் பறந்தது. செண்பகத் தளிர்களினாலான ஆடை அணிந்திருந்தாள். வாயில் இரு வீரப் பற்கள் இருந்தன. 'அழகுனு சொன்னே?' என்றேன்.

'ஆமாடா, ரொம்ப அழகான பொண்ணுக்கு இரண்டு வீரப்பல் இருந்தா இன்னும் அழகுதான்...' அம்மா சொன்னாள். யட்சி அம்மாவிடம் பேரைக் கேட்டாள். பெயர் பிடித்திருந்தது. அம்மா யட்சியிடம் அவள் எங்கெல்லாம் போயிருக்கிறாள் என்று கேட்டாள். யட்சி போகாத இடமே இல்லை. நட்சத்திரங்களுக்கு இடையே மிக மிக இருண்ட ஒரு கடல் அலையடிக்கிறது. அதில் அவள் நீந்தியிருக்கிறாள். நிலவில் முகம் பார்த்துப் பொட்டு போட்டிருக்கிறாள். ஏழு கடல்களுக்கு அப்பால் இருக்கும் பொன்னாலான மலைமீது இருக்கும் செம்மணியாலான பாறைமீது படுத்துத் தூங்கியிருக்கிறாள். உருகிய உலோகங்கள் தீ போல ஓடும் பாதாள நதியைப்பார்த்திருக்கிறாள். அதிகாலைப் புற்களிலும் பூக்களிலும் படர்ந்திருக்கும் பனித்துளிகளை மட்டுமே யட்சி அருந்துவாள். செண்பகப் பூக்களில் ஊறும் முதல் தேனையும்.

அம்மா எங்கெல்லாம் போயிருக்கிறாள் என்று யட்சி கேட்டாள். அம்மா எங்குமே போனதில்லை. சமையலறை, குளம், வீட்டுத் தோட்டம், மீண்டும் சமையலறை. அதைக் கேட்டபோது யட்சியின் கண்கள் காற்றுப் பட்ட கனல்போல எரிந்தன. வாயில் வீரப் பல் ஒளிவிட்டது. யட்சி, நாடகத்தைச் சுட்டிக்காட்டினாள். அந்த நாடகத்தைப் பார்க்கத்தான் அவள் வந்தாள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவள் வேறு ஒரு நாடகத்தைப் பார்ப்பதாகச் சொன்னாள். பலா மரத்தின் உச்சிக்கு அவள் அம்மாவைக் கூட்டிச் சென்றாள். அங்கிருந்து பார்த்தபோது கோயில் குளம் ஒரு பெரிய கண்ணாடிபோலத் தெரிந்தது. அதில் அதே நாடகம் தலைகீழாகத் தெரிந்தது. அங்கிருந்து பார்த்தபோது அந்நாடகம் மிக வேடிக்கையாக இருந்தது. அதில் தாட்சாயணி தன் நெற்றிக் கண்ணைத் திறந்து சிவனை எரித்துச் சாம்பலாக்கினாள். யட்சியும் அம்மாவும் இரவு முழுக்கச் சிரித்தார்கள்.

அம்மாவுக்கு கண்ணில் முதல் ஆபரேஷன் முடிந்ததுமே படிக்கும் பழக்கம் போய்விட்டது. அதற்கும் வெகுகாலம் முன்பே அம்மா பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது.

மணிக்கணக்கில் படிக்காமல் புத்தகத்துடன் உட்கார்ந்திருப்பாள். அம்மாவிடம் கூடும் அந்த மௌனம் மிகவும் பயமுறுத்துவது. அப்பா இருந்தவரை அந்த மௌனத்தைக் கண்டு பொறுமையிழப்பார். கத்துவார், புலம்புவார். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. நாட்கணக்கில் அந்த மௌனம் நீளும், பிறகு பனிக்கட்டி உடைவது போலக் கலகலவென்று உடையும். கண் சரியாகத் தெரியாமல் ஆனபிறகு அந்த மௌனம் மாசக்கணக்கில் விரிய ஆரம்பித்தது. கனகு மட்டும்தான்

அப்போது அம்மாவை நெருங்க முடியும். பாட்டி கவனிக்கிறாளா இல்லையா என்று கவலைப்படாமல் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பாள். பேசிப் பேசி இருவரும் ஒன்றாக ஆகிவிடுவதுபோல இருக்கும். உடலின் ஓர் உறுப்பு இன்னோர் உறுப்புடன் பேசிக்கொண்டிருப்பதுபோல.

டா க்டர் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். பஸ் இறங்கும்போது வெயில் சாய ஆரம்பித்திருந்தாலும் சூடு அடங்கவில்லை. அம்மா கண்மீது கையை வைத்துப் பாதையைப் பார்த்தாள். நான் கனகுவின் பிடிவாதம் பற்றி அவளிடம் அவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஒரே பெண். பதினேழு வயதில் தன்னந்தனியாக லக்னோவுக்குப் படிக்கப் போகிறேன் என்கிறாள். எங்கள் பதைப்புகளை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சிரிக்கிறாள். எது பேசினாலும் ஒரே சிரிப்பு. உலகமே வேடிக்கைகளால் நிரம்பியிருப்பதுபோல. 'அவள் வாயிலே யட்சி பிரசாதம் வெச்சிருக்கப்பிடாது. சொன்ன பேச்சு கேக்க மாட்டா... எதுக்கெடுத்தாலும் ஒரு கலீர் சிரிப்பு... நீயாவது பேசிப் பாத்து ஒரு நல்ல புத்தி சொல்லு' என்றேன். அம்மா அதைக் கேட்டதாகவே தெரியவில்லை.

'ரொம்ப வெயிலா இருக்கேடா' என்றாள் அம்மா.

'பக்கம்தானே. அஞ்சு நிமிஷத்தில் போயிடலாம்' என்றேன். சலிப்பாக இருந்தது. அம்மாவுக்கு இப்போதெல்லாம் தன் உடல் அவஸ்தைகள் தவிர வேறு நினைப்புகளே இல்லை.

ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கலாம் என்று நான் கடைப் பக்கம் திரும்பியபோதுதான் அந்த போஸ்டரைப் பார்த்தேன். அப்போதுதான் மாலை நாளிதழுக்காக ஒட்டியிருந்தான். ஓடிப் போய் ஒரு பிரதி வாங்கி கை நடுங்க விரித்துப் படித்தேன். முதல் பத்திக்கு மேல் படிக்க முடியவில்லை.

ரோட்டைத் தாண்டி மறுபக்கம் வந்து அம்மாவிடம் உரக்க,

'அம்மா அம்மா...' என்றேன். 'இ.எம்.எஸ். இறந்துட்டா...'
'யாரு?'
இ.எம்.எஸ். இன்னைக்கு மத்தியான்னம்.

'ம்' அம்மா திரும்பி மண் பாதையைப் பார்த்து, 'ஒரே வெயிலா கொளுத்துதே' என்றாள்.

என் மனத்தில் அக்கணம் சொற்களே இல்லை. பின்பக்கம் பைக் ஒலி கேட்டு பின்னால் நகர்ந்து ஒதுங்கி வழி விட்டேன். பெரிய எஸ்டி பைக் மீது கனகு. சிரித்தபடி, 'ஏறிக்க பாட்டி' என்றாள்.

'யார்துடீ இது?'

'மனோகர் மாமாவோடது. ஏறு பாட்டி.'

'எறங்குடி கீழ... எரும மாதிரி இருக்கு வண்டி'

'போப்பா... நீ ஏறு பாட்டி.'

அம்மா அதன்பின் ஏறிக்கொண்டாள். 'அப்பா நீங்க முன்னாடி ஏறிக்கிறீங்களா?"

'கனகு, பாத்து...'

'சும்மா பயப்படாதீங்கப்பா. பைக் புகை கக்கி முன்னால் பாய்ந்து போயிற்று. கனகுவின் குட்டைத் தலைமயிர் தீபோலக் கொழுந்து பரப்பிப் பறந்தது.

ஆனந்த விகடன் தீபாவளி மலர், 2005

யட்சி: பூமியில் வாழும் தேவர்களில் ஒரு வகையினர் யட்சர்கள். யட்சி அதன் பெண்பால். மிக அழகிய பெண்ணாகத் தோன்றி எதிர்ப்படுபவர்களைக் கவர்ந்து மோகமூட்டி இறுதியில் கொன்று உண்ணும் என்று புராண நம்பிக்கை. ஒரு வகை மோகினிப் பேய் எனலாம். குமரி மாவட்டத்தில் பல நூறு யட்சி ஆலயங்கள் உள்ளன.