NINAIKKAATHA NERAMEDHU - 2 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 2

நினைவு-2

"அக்கா! இந்த பிராப்ளம் மட்டும் எனக்கு சால்வ் ஆக மாட்டேங்குது. இதுக்குதான் எனக்கு கணக்குன்னாலே கடுப்பாகுது.” அங்கிருந்த சிறுவர்களில் பெரியவனான சதீஷ் மூக்கால் அழ, திவ்யா அலுப்பாக பார்த்தாள்.

"ஏன்டா, ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ்‌ பண்ணி வச்சா எப்படிடா வரும்? பார்முலா படி போட்டா கரெட்டா வந்துடும். கொஞ்சம் கவனிச்சு போடு!"

அவள் எப்படிச் சொன்னாலும் சிறுவனின் மூளையோ ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது.

"போங்கக்கா... பக்கம் பக்கமா படிக்கச் சொன்னாக் கூட படிச்சுடலாம். ஆனா இந்தக் நம்பர் கூட்டி கழிச்சு போடுறதுனாலே எனக்கு நாக்கு தள்ளுது.” என வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டான் சதீஷ்.

திவ்யாவைச் சுற்றி பலதரப்பட்ட வயதில் பிள்ளைகள் பதினைந்துபேர்‌ வட்டமாக அமர்ந்திருந்தனர். பள்ளியில் தினசரி கொடுக்கும் அவர்களின் வீட்டுப் பாடங்களை பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தாள்.

"ஏம்மா! நீயே அலுப்பா வந்திருப்ப... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கக் கூடாதா?" சண்முகம் அங்கு வந்தமர்ந்தவாறே கேட்க,

''இல்லை அங்கிள்‌ கொஞ்சநேரம் தான். சதீஷ் இந்த வருஷம் டென்த் ‌இல்லையா? ஏற்கனவே‌ ஐயா கணக்குல புலி... கொஞ்சம் கேப் ‌விட்டாப் போதும்... நம்ம வீட்டு ரசத்துக்கு இவன்கிட்டயே புளி சுரண்டிடலாம். ஒன் ப்ளஸ் ஒன் என்னன்னு கேட்டா முழிப்பான்."

“சீதைக்கு ராமன் சித்தப்பானான்னு கேக்குற கணக்குலேயே தான் இந்த காலத்து பிள்ளைகளும் இருக்காங்க!”

“அதே தான் அங்கிள், அதான் விடாம பிடிக்கிறேன்.”

"சரிம்மா… சீக்கிரம்‌ முடிச்சுட்டுப் போய்‌ ரெஸ்ட் எடு! இவங்களை‌ எல்லாம் சன்டே புடிச்சு உக்கார வை!" என்றதும் அங்கிருந்த சிறுவர் சிறுமிகளின் கூட்டமே அதிர்ந்து போனது.

"ஐயோ! அப்பா அந்த‌ ஒரு நாளாவது எங்களை‌ ஃப்ரியா‌ விடச் சொல்லுங்க."

"ஆமாஆஆ… ப்ளீஸ்" என அனைவரும் கோரசாகக் சேர்ந்து முகாரி பாட,

"அப்படின்னா அக்கா சொல்றத சீக்கிரம்‌ முடிக்கப் பாருங்க! நான் அம்மாகிட்ட சொல்லி சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்றேன்." என்று கட்டளையாகக் கூறிய சண்முகம் சாப்பாட்டு ஹால் நோக்கிச் சென்றார்.

அங்கிருந்த பதினைந்து பிள்ளைகளும் சண்முகம் பெறாமல் பெற்ற பிள்ளைகள். திருமணம் முடிந்து சில வருடங்களாகியும் பிள்ளைச் செல்வம் கிடைக்காத நிலையில் சொந்தங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்த,

 "ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, என் பொண்டாட்டிக்கும் வரப்போற பொண்ணுக்கும் என்னால வஞ்சனை பண்ண முடியாது. எங்களுக்கு பொறக்கலைனா என்ன? நாங்க தத்தெடுத்து வளத்துட்டுப் போறோம்." என முடிவாகக் கூறி விட்டார்.

"யாருக்கோ... எங்கேயோ... எப்படியோ... பிறந்த பிள்ளையை எல்லாம் இந்த வீட்டு வாரிசாக ஏத்துக்க முடியாது." என பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் கறாராய் கூறிவிட்டார்.

அதோடு நிற்காமல் தன் பங்கு சொத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு தன் மனைவி லட்சுமியோடு சொந்தவீட்டை விட்டு, சொந்தங்களை விட்டு வெளியேறி விட்டார்.

அப்படி வந்தவர் முதன்முதலாக பொறுப்பேற்றுக் கொண்ட குழந்தைதான் சதீஷ். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு ‘தலைச்சன்பிள்ளை’. அதன்பின் ஒவ்வொன்றாக மொத்தம்‌ பதினைந்து பிள்ளைகள். முறைப்படி தன் பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்காக யாரிடமும் உதவி கேட்டுச் சென்று நின்றதில்லை. பிள்ளைகளையும் அதற்குமேல்‌ சேர்த்துக் கொள்ளவில்லை. தானும் கஷ்டப்பட்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட விடக்கூடாது என்பது அவர் எண்ணம். தனக்கென ஒரு குடும்ப அமைப்பை உருவாக்கிக் கொண்டார்.

"நாம பெத்திருந்தாக் கூட ஒன்னோ ரெண்டோ தான் பெத்திருப்போம். ஆனா, இப்பப் பாரு. எத்தனை குழந்தைங்க... பதினாறும் பெற்று பெருவாழ்வு மாதிரி." என மனைவியிடம் பெருமை பேசுவார்.

"எங்கே? அதுல ஒன்னு குறையுதே!" எனக் கேட்கும் மனைவியிடம்,

"பதினாறாவது குழந்தை தான்டி நீ. என்னோட கடைக்குட்டி, செல்லக்குட்டி." என்று காதலும் பேசுவார்.

யாருமற்றவர்கள் என்று எவருமில்லை. அன்பு செய்யத் தெரியாதவர்களே ஆதரவற்றோர்.

"திவிம்மா! உன்னை ஆன்ட்டி கூப்பிடுறா... போய் என்னனு கேளு! நான்‌ இவங்களைப் பாத்துக்கிறேன்."

இப்படியே விட்டால் திவ்யா நகர மாட்டாள் எனத் தெரிந்து அவளை உள்ளே அனுப்பி விட்டார்.

"என்ன‌ ஆன்ட்டி கூப்பிட்டிங்களா?" என்று லட்சுமியிடம் கேட்டபடி வந்து நின்றாள் திவ்யா.

"ஆமாம்மா! இந்த சாப்பாடெல்லாம் எடுத்து வைக்கணும்." என்றார் தன் கணவரின் எண்ணம் புரிந்தவராக.

சற்று நேரத்தில் பிள்ளைகளும் வந்துவிட இரவு உணவு வேலையை முடித்தனர்.

சற்றே வளர்ந்த பெரிய பிள்ளைகளும் சதீஷின் உதவியோடு சிறுசிறு வேலைகளை செய்து வீட்டினை ஒதுங்க வைத்தனர்.

லட்சுமியின் உதவிக்கு இரு முதியவர்களும் உண்டு. அவர்கள் சற்று வயதானவர்கள் என்பதால் இரவில் சீக்கிரம் சாப்பாடு கொடுத்து படுக்கைக்கு அனுப்பி விடுவார்.

எல்லோரும் படுக்கைக்குத் தயாராக திவ்யா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தோட்டத்துப் பக்கம் வந்தாள். எவ்வளவு அலுப்பாக இருந்தாலும், தோட்டத்துப் பக்கமாக வந்து பவளமல்லியின் செடியின் கீழ் அமர்ந்தாலே அன்னை மடியின் இதம் அவளுக்கு.

ரெண்டு கிரவுண்ட் இடத்தில் தங்கள் தேவைக்கு மட்டும் வீட்டைக் கட்டிக்கொண்டு மீதி இடம் முழுவதும் தோட்டமாக்கி இருந்தார் திவ்யாவின் அம்மா.

அவர் நட்ட பவளமல்லிச் செடி பெரிதாகி பூத்துக் குலுங்க ஆரம்பித்ததும், அதைச் சுற்றி உட்காரும் அளவிற்கு திட்டு ஒன்றை திவ்யாவின் அப்பா போட்டு விட்டார்.

அவர்கள் இருந்த வரையிலும் இரவு உணவு வேளைக்குப் பின், சிறிது நேரமேயானாலும் அந்தத் திட்டில் அமர்ந்து மூவரும் கதையளப்பது வழக்கம்.

பொழுதுசாயும் அந்திமாலையில் மொட்டாக இருக்கும் பவளமல்லி, இருள் கவிழ மொட்டவிழ்ந்து இதமாக மணம் பரப்பும். காலையில் மரத்தைச் சுற்றி பவளத்தையும், முத்தையும் கலந்து கொட்டினாற் போல் சிதறிக் கிடக்கும்.

செடிநட்டவரும், அமர்வதற்கு திட்டு அமைத்துக் கொடுத்தவரும் இல்லாத பொழுதும், திவ்யா அங்கு வந்து அமர்ந்தாலே பெற்றோரின் இதம், பவளமல்லியின் நறுமணத்தில் அவளைத் தழுவிவிடும்.

அது மட்டுமா? பவளமல்லியின்‌ வாசனையில் இதமாகக் கண்மூடியவளின் காதோரம் சற்று கரகரத்த குரலில், "தியா…" எனும் இதமான அழைப்பு. கண்ணோரம் சூடான நீர்த்துளி. இதழோரம் அவன் முத்தத்தின் ஈரம் இன்றும் அவளை சில்லிடச் செய்தது.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏன் அந்தக் கண்ணீர் அது யாராலே...

******

"என்னம்மா... என்ன சொல்றான் உன் மகன்?" என்று பேரனைப் பற்றி விசாரித்தார் தேவானாந்தன்.

"என்ன மாமா இது? புதுசா உன் மகன்... எப்ப இருந்து இந்த மாதிரி பேச்சு?" என்று கடிந்து கொண்டார் மங்கையர்க்கரசி.

"அப்புறம் என்னம்மா? நான் அந்தக் கம்பெனிய வாங்கப் போறேன்னு சொன்னதுல இருந்து அந்த படவா மூஞ்சியத் தூக்கி வச்சுகிட்டுத் திரியறான்!" சின்னப்பையனாக அவர் முகம் தூக்கிக் கொள்ள,

"அதுக்காக வாங்காம விட்டீங்களா என்ன? நீங்க நினைச்சபடி வாங்கி முடிச்சீங்க தானே!" என்று மருமகள் சொல்லவும் சற்றே அடங்கினார்.

டைனிங் ஹாலில் அமர்ந்து கொண்டு மாமனாரும், மருமகளும் பேரனைப் பற்றி விவாதித்து கொண்டிருந்த வேளையில் அவர்களின் எண்ணங்களின் நாயகனே கண்முன் தோன்றினான்.

தாத்தா தேவானந்தனுக்கும் தாய் மங்கையர்கரசிக்குமான சம்பாஷனையைக் கேட்டவாறே மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் சத்யானந்தன்.

"என்னம்மா! என்ன சொல்றாரு உங்க மாமனாரு?" கேட்ட மகனிடம்,

"என்னடா தம்பி பேச்செல்லாம் புதுசா இருக்கு?" என்று மங்கை மகனிடமும் அதே கண்டிப்பைக் காட்ட,

"இப்ப இவர் மட்டும் என்ன சொன்னாராம்? உன் மகன் எங்கேனு தானே கேட்டாரு?" சரிக்கு சரியாக கேள்வி கேட்டான்.

"ஒத்த புள்ளையா போயிட்டானே, கூடப் பிறந்ததுகளோடு சண்டை போட்டு வழக்கு தீக்குற பிரச்சினை நமக்கில்லையேனு நினைச்சா... தெனமும் தாத்தாவுக்கும், பேரனுக்குமே வழக்கு தீக்க முடியலை." மங்கை பெரிதாக நொடித்துக் கொள்ள,

"ரொம்ப நன்றிம்மா." என்று தேவானந்தன் இடையிட்டார்.

"எதுக்கு மாமா?"

"அவனோட சேத்து என்னைய சின்னப் பிள்ளையாக்குனதுக்கு," என்று குதூகலிக்க,

அம்மாவைப் பார்த்தவன் புருவத்தால், ‘பாத்தீங்களா?’ என்று சைகை செய்ய, இருவர் முகத்திலும் புன்னகை விரிந்தது.

"சின்னப் பையன்ற நினைப்புல தானே அந்தக் கம்பெனிய வாங்கி நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டீங்க!"

"என்னடா சொல்லுற... எனக்கு என்ன அவ்ளோ வயசா ஆயிருச்சு?"

"உங்களுக்கும் உங்க ஃப்ரெண்டுக்கும் ஒரே வயசு தானே. அவரை டாக்டர் ஓய்வெடுக்கச் சொல்லவும் தானே, அவர் பிசினஸைக் கை மாத்தி விடுறாரு. நீங்க மட்டும் எப்படி நடத்துவீங்க?"

"ஏன்டா! நீ உதவ மாட்டியா?"

தாத்தா ஒரு விசயத்தை பொறுப்பெடுத்துக் கொண்டார் என்றால், அதில் பேரனின் பங்களிப்பு இல்லாமலிருக்காது தான். ஆனால் இதற்குமேல் ஏன் அவரை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதாலேயே அவன் மறுப்பு தெரிவிப்பது.

"தாத்தா! நான் பொறுப்பெடுத்துக்கறது இருக்கட்டும். நம்ம பிசினஸ கவனிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம். இதுல அந்தக் கம்பெனி வாங்கித்தான் ஆகப்போறது என்ன?"

"இப்ப நீ சொன்னியே. நிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம்னு, அதுக்கு மூலாதாரமே அந்தக் கம்பெனிதான்டா! அதுதான் எங்களோட முதல் விதை. இன்னைக்கு கோவையில, ஆர்.எஸ்.புரத்துல. ஹைசொஸைட்டி வாழ்க்கை வாழறோம்னா அதுக்கு மூலகாரணமே அந்தக் கம்பெனி தான்.

எனக்கும் அவனுக்கும் தலைச்சன் பிள்ளை மாதிரி. அதுல லாபம் வருதோ இல்லையோ? இன்னொருத்தருக்கு விட்டுத் தரமுடியாது. உனக்கும் உன் அம்மாவுக்கும் வேணும்னா அதைப்பத்தி தெரியாம இருக்கலாம்.

ஆனா உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். அவன் இருந்திருந்தா நான் இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இருந்திருக்காது!” என குரல் கமர கூறியவரை, சத்யா எழுந்து சென்று தோளோடு அணைத்து க் கொண்டான்.

"ஐயோ தாத்தா! இந்த அழுகாச்சி மூஞ்சி நமக்கு செட்டாகாது. ஃபார்ம்க்கு வாங்க."

பெரியவரின் மங்கையர்க்கரசியும் கண்கலங்கி நின்றார்.

"உங்களை வெளியேத்தின கம்பெனியாச்சேன்னு தான் நாங்க யோசனை பண்ணினோம். ஆனா நீங்க அதுமேல இவ்வளவு ஈடுபாட்டோட இருக்கும் பொழுது நாங்க எப்படி மறுத்து பேசமுடியும், சொல்லுங்க!" என்று உரிமையாகக் குறைபட்டான் சத்யா.

சற்று தளர்ந்த நிலையில் கூட அவர்களால், அவரைப் பார்க்க முடியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அசராமல் தூணாக குடும்பத்தைத் தாங்கியவர்.

"எங்கப்பா என்கூட இருந்தாலே யானைபலம்!" என்று தன் கணவர் அடிக்கடி சொல்வதும் மங்கையின் நினைவில் நிழலாடியது. இதையே தான் தன் மகனைப் பார்த்து தேவானாந்தனும் சொல்வார்.

அப்படிப்பட்ட மகனையே திடீரென இழந்த நிலையில், தொழில் எதிரிகள் அந்த பலவீனமான நிலையைப் பயன்படுத்தி வீழ்த்த நினைத்த வேளையிலும், திடமாய் இருந்தவர் தேவானந்தன்.

தசரதனையே வீழ்த்திய புத்திரசோகம் தன்னை வீழ்த்துமுன், மருமகளையும், பேரனையும் மனதில் கொண்டு நிமிர்ந்தவர். தன் தொழில் வட்டாரத்தில் சிங்கமாய்த் திகழ்ந்தவர்.தன் பேரனையும் அதேபோல் உருவாக்கியவர்.

தேவானாந்தனின் குடும்பமும் சாதாரணக் குடும்பமல்ல. அவினாசியில் தோப்பு, வயல், ரைஸ்மில் என்று வாழ்ந்த பாரம்பரியமான குடும்பம்தான்.

கமிஷன் மண்டி வைத்து நல்ல வருமானம் பார்த்து வந்தவர் தேவானந்தன். அந்தப்பக்கம் அடிக்கடி திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும். திரைப்படத் துறையை சேர்ந்தவர், இவரின் அப்பாவிற்கு பழக்கமானது.

அவர் காட்டிய சினிமா ஆசையில், சத்யபிரகாஷின் எதிர்ப்பையும் மீறி, ஆழம் தெரியாமல் காலை விட்டார். ஆனானப்பட்டவர்களே இத்துறையில் திணறும் பொழுது, அம்மாய சுழல் அவரை எளிதாக சுழற்றிக் கொண்டது.

தேவானந்தனின் குடும்பமும் வாழ்ந்துகெட்ட குடும்பங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. மிகுந்த இன்னலில் வாழ்நாளைக் கடத்த ஆரம்பித்தார்.