கதிர் நந்தனாவிடம் ஆமா, இப்ப எதுக்கு கப்பல் கவுந்தமாதிரி மூஞ்சவெச்சுருக்க மச்சான் என்றான். ஓ கப்பல் கவுந்தா மூஞ்ச இப்படித்தான் வெச்சு இருப்பாங்கன்னு உனக்கு யாரு சொன்னது, என்று அவனிடம் பாய்ந்தாள், அவனோ அலட்டிக்கொள்ளாமல் நீ நல்லாத்தான் இருக்கியா? எதோ கவலைல இருக்கனு நினைச்சு ஆறுதல் சொல்லான்னு பாத்தேன் ஓகே ஓகே நீ உன் ஆராய்ச்சிய நடத்து என்றான்.
என்னடா கிண்டலா? பின்ன என்ன அந்த அய்யனார் கிட்ட பேசிட்டு வந்ததுலயிருந்து எதோ ஞானி லெவெல்க்கு பீலிங்ஸ் விட்டுட்டு இருக்க என்றான். அர்ஜுன் சொன்னதை கதிரிடம் சொல்ல தோணாமல் அந்த பேச்சை மாற்றினாள், கதிரிடம் இருந்து நந்தனா மறைக்கும் முதல் விஷயம் இது. அதனை அவள் உணரவேயில்லை.
திடீரென எதோ தோன்ற நந்தனா கதிரிடம் ஏன் தோஸ்த் நீ அர்ஜுன் இடத்துல இருந்து உன்கிட்ட ஒரு பொண்ணு சவால் விட்டு அவளே அத மறந்ததுக்கப்புறம் நீயா கூப்பிட்டு நான் தோத்துட்ட அப்படினு ஒத்துப்பியா? என்றாள். நா என்ன லூசா அது ஒரு பொண்ணுகிட்ட போய் தோத்திட்டனு ஒத்துக்க என்றான். அப்ப அர்ஜுன் எப்படி ஒத்துக்கிட்டாரு? அத நீ அர்ஜுன் கிட்டதான் கேட்கணும். வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் இதே கேள்வியைத் தன் அண்ணனிடம் கேட்டாள், அதைக் கேட்டுக்கொண்டிருந்த சந்தியா நல்லா கேட்டபோ, உங்க அண்ணனுக்கு என்கிட்ட சாரி கேட்கவே வாய் வராது. எதாவது வாங்கிக்குடுத்து சமாளிப்பாரே தவிர, நான் தப்பு பண்ணிட்டேன் நீதான் கரெக்ட் அப்படினு ஒத்துக்கவே மாட்டாரு என்றாள், உன் ஆபீஸ் பஞ்சாயத்துல என் தலைய ஏன் தங்கச்சிமா உருட்டுற என்றான் விக்ரம்.
போடா அப்படியே அண்ணிக்கு பயப்படுற மாதிரி, அண்ணி இவன சும்மா விடாதீங்க உங்ககிட்ட சாரி கேக்குறதுல, ஆன ஆபீஸ் போன் பேசுறப்ப எத்தனை சாரி சொல்றான் தெரியுமா?, அதெல்லாம் யாருக்கு சொல்றன்னு கேளுங்க என்றாள், அடப்பாவி சும்மா கதை கேட்க உக்காந்தவன இப்படி கோர்த்துவிட்டுட்ட, என்று கேட்டவன் அவ சொல்றதல நம்பாத குட்டிம்மா என்று தன் மனைவியிடம் சமாதானம் பேசத் தொடங்கினான். அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றாள் நந்தனா. அன்று இரவு அவள் தூங்க வெகுநேரம் ஆனது, அவள் எண்ணம் முழுக்க அர்ஜுன் மீதே\ இருந்தது. அடுத்த நாள் நாட்டியபள்ளிக்குச் செல்லும்வரை கூட அவளுக்கு அந்த எண்ணம்தான் ஓடிக்கொண்டிருந்தது. அங்கு சென்று யாழினியைப் பார்த்ததும் யாழினியின் பேச்சும் சிரிப்பும் அர்ஜுனின் எண்ணத்தை பின்னுக்கு தள்ளியது.
இந்த குறுகியக் காலத்தில் நந்தனா யாழினிக்கு மிகவும் பிடித்த தோழியாக மாறிப்போய் இருந்தாள். அன்று அரவிந்திடம் நந்தனா யாழினிக்கான நாட்டிய உடைகளை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். அரவிந்த் இதெல்லா எனக்கு பெருசா தெரியாது, நான் டிரஸ்க்கு எவளோ ஆகுதோ குடுத்துடுறேன் என்றான். நாங்க இங்க அது செய்றதுல நீங்க வெளியில தான் பாத்துக்கணும் என்றவள், அவன் யோசிப்பதைப் பார்த்து யாழினியின் அம்மாவ வரச்சொல்லுங்க நான் அவங்க கிட்ட சொல்றேன் என்றாள். அரவிந்த் கசங்கிய முகத்துடன் யாழினியின் அம்மா, அவள் பிறந்தவுடன் இறந்துவிட்டார் என்றான். அவன் சொன்ன விஷயம் நந்தனாவை அதிர்ச்சியாக இருந்தது. சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்த யாழினியை வலியுடன் பார்த்தாள். பின் தன்னை சமாளித்திக்கொண்டு தானே யாழினியை நாளை கடைக்கு கூட்டி செல்வதாகச் சொல்லி அரவிந்திடம் எங்கு வரவேண்டும் என்று விவரங்களைக் கூறினாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்த அரவிந்தின் பார்வையை அவள் உணரவில்லை. நேற்று முழுவதும் இருந்த அர்ஜுனின் எண்ணம் மாறி இன்று யாழினி மட்டுமே நந்தனாவின் நினைவில் இருந்தாள். எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
வீட்டிற்கு வந்த நந்தனா யாரிடமும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள். நந்தனா இன்னும் வரவில்லை என்று எண்ணி அவள் எண்ணிற்கு அழைத்தார் சாவித்ரி, போன் அவள் ரூமில் அடிக்கும் சத்தம் கேட்கவும் அங்கு சென்று பார்த்தார். எப்பொழுதும் உள்ளே நுழையும்போதே அம்மா பசிக்குது என்று சத்தம் போட்டுக்கொண்டே வரும் பொண்ணு, இன்று இப்படி அமைதியாய் படுத்திருப்பது வித்தியாசமாகத் தோன்ற சாவித்ரி மகளின் அருகில் அமர்ந்து தலையைக் கோதினார். நந்தனா நகர்ந்து தாய் மடியில் தலைவைத்துக் கொண்டாள். என்னடா ஆச்சு எதும் பிரச்சனையா? என்று தாய் கேட்டதுதான் தாமதம் நந்தனா யாழினியைப் பற்றி சொன்னாள், அதோடு ஏன்மா நீங்க இல்லாம இப்பகூட எனக்கு எதுவும் செஞ்சுக்க தெரியாது. பாவம் அந்த சின்ன பொண்ணு எப்படிம்மா தனியா எல்லா செஞ்சுப்பா, என்று அழுத மகளைப் பார்த்து சாவித்ரிக்கு வருத்தமாக இருந்தது. அறையில் அவள் அழும் சத்தம் கேட்டு அங்க வந்த விக்ரமும், சதாசிவமும் என்ன ஆச்சு ஏன் நந்து அழுதுட்டு இருக்க என்று கேட்டதோடு அம்மா நீங்க அவளை திட்டுனீங்களா? என்றான் விக்ரம், அவனை முறைத்த சாவித்ரி நடந்ததை சொன்னார். அதை கேட்ட விக்ரமிருக்கும், சதாசிவத்திற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சாவித்ரி மகளை அனுப்பி முகம் கழுவி வர சொன்னார். பின்பு அவளை அருகில் உக்காரவைத்து, இங்க பாரு நந்து, எல்லார் வாழ்க்கையும் வித்தியாசம் ஆனது. இன்னைக்கு அந்த குட்டி பொண்ணு கஷ்டப்படலாம், நாளைக்கே இந்த கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து இதை விட அதிகமான சந்தோசத்த கடவுள் அந்த பொண்ணுக்கு கொடுப்பாரு, எல்லார் வாழ்க்கையிலும் எப்பவும் சந்தோசமா மட்டு இருக்கனுன்னு எதிர்பாக்க முடியாது, வாழ்க்கைனா எல்லாமே இருக்கும். இதுக்கெல்லா அழுதா எப்படி, உன்கிட்ட கிளாஸ்க்கு வரவரைக்கும் யாழினிய நீ நல்லா பாத்துக்கோ அவ்ளோதான் என்றார் சாவித்ரி. நந்தனாவிற்கு தாய் சொல்வது சரி என்று தோன்ற சம்மதமாய் தலையசைத்தாள்.
மறுநாள் அரவிந்த் யாழினியைக் கூட்டிக்கொண்டு நந்தனா சொன்ன இடத்திற்கு வந்தான், அதற்கு முன்பே அங்கு வந்து இருந்த நந்தனா, அவர்களைப் பார்த்து கையசைத்தாள், யாழினியை அங்கு உள்ள கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியவைகளை வாங்கி தைக்க கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர். அங்கு இருந்த ஐஸ் கிரீம் பார்லரை பார்த்த யாழினி தனக்கு ஐஸ் கிரீம் வேண்டும் என்று தன் சித்தப்பாவிடம் அடம்பிடித்தவள் நந்தனாவையும் உடன் அழைத்தாள். அவளிடம் மறுத்துக் கூற முடியாமல் அவர்களுடன் சென்றாள் நந்தனா. யாழினி சாப்பிடுவதில் கவனமாக இருக்க நந்தனாவும்,அரவிந்தும் பேசிக்கொண்டு இருந்தனர். நந்தனா அரவிந்திடம் அவனைப் பற்றிக் கேட்க, நான் ஒரு லாயர், என்னோட சீனியர் கூட ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் எங்க வீட்டுல அம்மா, அப்பா, அண்ணன் , நான், யாழினி குட்டி எல்லாரும் இருக்கோம். அப்பா import & Export கம்பெனி வெச்சு இருக்காரு, அம்மா ஹோம் மேக்கர் என்றான் அரவிந்த். நந்தனா தான் அட்வெர்டெய்சிங் கம்பனியில் வேலை செய்வதாகக் கூறியவள், சிறுவயதில் இருந்து டான்ஸ் மீது இருந்த ஆர்வத்தால் இங்கு சொல்லிகுடுக்க வருவதாகக் கூறினாள். அவள் அட்வெர்டெய்ஸிங் கம்பனியில் ஒர்க் பண்ணுவதாகக் கூறியதைக் கேட்ட அரவிந்த், ஏனோ தன் அண்ணனும் அந்த துறையில் தான் வேலை செய்கிறான் என்பதை அவளிடம் கூற பிடிக்காமல் அமைதியாக இருந்தான்.
அன்று இரவு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த அர்ஜுன், அவன் அம்மா ஹாலில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று அமர்ந்தான். அவன் அம்மா ரேவதி அர்ஜுனிடம் அவன் கல்யாண பேச்சைத் தொடங்க அவருக்குப் பதில் சொல்லாமல் அங்கு வந்த அரவிந்திடம் யாழினி பற்றி கேட்டான். அரவிந்த் அவள் உறங்கிவிட்டதாகக் கூற எழுந்து அவள் அறைநோக்கி சென்றான். போனவனை கோவமாக பார்த்த ரேவதி முதல யாழினிய ஹாஸ்டல்ல சேர்த்தனும் அப்பதான் இவன் நம்ப சொல்றத கேப்பான் என்றார். அதை கேட்ட அர்ஜுனின் தந்தை சந்திரசேகர் நீ இப்படி பேசுறத கேட்டா உன் பிள்ள இந்த வீட்டுலயே இருக்கமாட்டான் பரவலயா என்றார், அவரை கோவமாக முறைத்த ரேவதி நான் சொன்னா யாரு கேட்க போறீங்க என்னமோ பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சென்றார். இதை எதையும் அறியாத அர்ஜுன், அறையில் தூங்கிக்கொண்டு இருக்கும் தன் மகளை ரசித்துக் கொண்டிருந்தான். இங்கு நந்தனாவோ யாழினியை பற்றி எண்ணி கொண்டிருந்தாள், யாழினியை ஒருநாள் கூட கிளாஸ்ஸிற்கு கூட்டி வராத அவள் அப்பாவை திட்டி கொண்டிருந்தாள்.