Nandhavanam - 10 in Tamil Love Stories by Narumugai books and stories PDF | நந்தவனம் - 10

Featured Books
Categories
Share

நந்தவனம் - 10

தன்னை அவர்கள் கவனிக்கப் போவதில்லை என்று உணர்ந்த அர்ஜுன், இது ஹாஸ்பிடல் நியாபகம் இருக்கா என்று கேட்டுக்கொண்டே யாழினியின் மறுபுறம் சென்று அமர்ந்தான். எதுக்கு சம்மந்தமே இல்லாம இதை சொல்றீங்க என்றாள் நந்தனா, இப்படி உலகம் மறந்து அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கீங்களே அதான் சொன்னேன், என்ன பாஸ் ஆபீஸ்ல பேசுன ஆபீஸ்ல  அரட்டை அடிக்குறீங்கனு சொல்றீங்க, இப்ப ஹாஸ்பிடல்ல அரட்டை அடிக்குறன்னு சொல்றீங்க,  இதெல்லா உங்களுக்கே நியாயமா என்றாள், ஆமா ஆமா நான் சொன்னா உடனே நீ கேட்டுடுற மாதிரிதான் என்றவனை முறைத்தாள். அண்ணா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்ட அரவிந்தை அப்போதுதான் பார்த்தான் அர்ஜுன், நீ இங்கதான் இருக்கியா நான் கவனிக்கவேயில்லை  என்று சொன்ன தன் அண்ணனை கண்டு தனக்குள் சிரித்திக்கொண்டான் அரவிந்த், நந்தனா தன்னை விட தன் அண்ணனுக்குத்தான் சரியான ஜோடி என்ற அவன் எண்ணம் மேலும் வலுப்பெற்றது. ஒரு புறம் காதலின் வலி இருந்தபோதும், அதை பின்னுக்கு தள்ளி தன் அண்ணனுக்காக யோசித்தான்.

டேய் அரவிந்த் என்னடா கேள்வி கேட்டுட்டு என்னமோ யோசிச்சுட்டு இருக்க, அதெல்லா ஒன்னு இல்லனா, நீ சொல்லு என்றான். டாக்டர் இன்னைக்கு  ஈவினிங் யாழினிய வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலானு சொல்லிட்டாங்க, இப்ப அவளுக்கு சாப்பிட காஞ்சி மாதிரி குடுக்க சொன்னாங்க அது எங்கயாவது ஹோட்டல்ல கிடைக்குமா என்று கேட்டான், அதெல்லாம் ஒன்னு வேண்டாம் நான் ஏற்கனவே அம்மாகிட்ட சொல்லிடேன். அண்ணா கொஞ்சநேரத்துல கொண்டுவந்துடுவான் என்றாள் நந்தனா.

ரொம்போ தேங்க்ஸ் நேத்துல இருந்து நீ யாழினிக்காக நிறைய செஞ்சுட்ட, நீங்களா இல்லைனா நான் என்ன  செஞ்சிருப்பனு எனக்கு தெரியல என்றவனை பார்த்த நந்தனாவிற்கு மனதை பிசைந்தது அதை காட்டி கொள்ளாமல், பாஸ் நீங்க அய்யனார் மாதிரி முறைச்சுட்டு இருந்தா கூட எனக்கு ஓகே, ஆனா உங்களுக்கு இந்த பீலிங் கேரக்டர் செட் ஆகல என்றாள். உன்கிட்ட போய் சொன்னன் பாரு என்பதுபோல பார்த்துவிட்டு திரும்பி யாழினியிடம் பேசத் தொடங்கினான். 

இப்படி பேச்சும் சிரிப்புமாக யாழினிக்கு தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்ற எண்ணம் வராமல் பார்த்துக்கொண்டனர். திருமணத்தில் இருந்து திரும்பி வந்த அர்ஜுனின் தாய், தந்தை தங்களிடம் விஷயத்தை மறைத்ததற்காக அண்ணனையும், தம்பியையும் நன்றாகத் திட்டி தீர்த்தனர். யாழினியைப் பார்த்து அர்ஜுனின் அம்மா அழத் தொடங்கினாள். இவளுக்கு மட்டும் ஏன்தான் இதெல்லாம் நடக்குதோ கடவுளுக்கு  கருணையே இல்லை என்று கூறி புலம்பும் அர்ஜுனின் அன்னை ரேவதியை பார்த்த நந்தனா குழம்பி போனாள். அர்ஜுனும், யாழினியும் சொல்வதைப் போல இவர்கள் யாழினியை வெறுக்கிறார்கள் என்று நந்தனாவால் நினைக்கமுடியவில்லை.

யாழினியைப் பார்க்கவென்று சாவித்ரியும் வர அனைவர்க்கும் அறிமுகப்படலம் முடிந்து ஒருவரோடு ஒருவர் பேச தொடங்கினர். யாழினி வீட்டுக்கு கிளம்பும் நேரம் வரை அனைத்தும் நன்றாக போய்க்கொண்டிருந்தது, கிளம்பலாம் என்று வந்த அர்ஜுனிடம் நந்தனாவை விட்டு வரமாட்டேன் என்று அழத்தொடங்கினாள் யாழினி, என்ன  செய்வது என்று தெரியாமல் அனைவரும் குழம்பி நின்றனர். ஆபீஸ் சென்றிருந்த கதிரும், விக்ரமும் அப்பொழுதுதான் உள்ளே வந்தனர், யாழினி அழுகைக்கு காரணம் அறிந்து கதிர், நந்தனாவைப் பார்த்தான், அவள் அவனை பார்ப்பதைத் தவிர்த்தாள். இந்த நிலைமையில் யாழினி அழுவது நல்லதல்ல என்று உணர்ந்த சாவித்ரி, நந்தனாவை யாழினியுடன் சென்று அவளை வீட்டில் விட்டுவிட்டு வர சொன்னார். அவர் கதிரையும் அவர்களோடு போகச் சொன்னார், அவன் தனக்கு வேலை இருக்கிறது என்று கூறி மறுத்துவிட்டான். விக்ரமும், சாவித்ரியும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர். அனைவர் முன்னிலும் ஏதும் கேட்க விரும்பாமல் அமைதி காத்தனர்.

நந்தனா, யாழினியுடன் கிளம்பிவிட கதிர், சாவித்ரி மற்றும் விக்ரம் உடன் வீட்டிற்கு சென்றான். வேலை இருக்கிறது என்று சொன்னவன் வீட்டுக்கு வந்து எதுவும் நடக்காதது போல சந்தியாவிடம் காபி வாங்கி குடித்துக்கொண்டிருந்தான்.  கதிர் உனக்கு நந்தனாவுக்கு சண்டையா என்றான் விக்ரம், ஏங்க நீங்க தெளிவாதான் இருக்கீங்களா, அவங்க ரெண்டு பேருக்கு சண்டையானு கேக்குறீங்க? என்ற சந்தியாவிடம்  நடந்ததை சொன்னான் விக்ரம், டேய் அவர் சொல்றது உண்மையா நந்தனா கூட போகமாட்டனு சொன்னியா? என்ற சந்தியாவை பார்த்தவன், உங்க எல்லாருக்கு ஒன்னு சொல்றன் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராயிருங்க, கவனமா கையாளனும் இல்லைனா நம்ப நேசிக்குறவங்கள காயப்படுத்திடுவோம், நான் வீட்டுக்கு போயிட்டு காலைல வரேன் என்றவன் யார் முகத்தையும் பார்க்காமல் வெளியேறினான்.

அவன் பேசுவது நந்தனாவை பற்றி என்று அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. இறைவா என் குழந்தையை கஷடப்படுத்திடாத என்று சாவித்ரி வேண்டுதல் வைத்தார், என்ன நடந்தாலும் நந்தனாவுக்கு துணைய இருக்கனுனு விக்ரமும், சந்தியாவும் நினைத்தனர். ஆனால் அவர்கள் யாருமே நந்தனாவின் பிரச்சனையை யாழினியுடன் சம்மந்தப்படுத்தி யோசிக்கவேயில்லை, வெளியில், வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை என்ற ரீதியில் யோசித்தனர்.

யாழினியை அவள் வீட்டில் விட்டுவிட்டு அடிக்கடி வந்து பார்ப்பதாகச் சொல்லி யாழினியை சமாதானம் செய்துவிட்டு கிளம்பினாள் நந்தனா. யாழினி இதுபோல் சிரித்து விளையாடி பார்த்ததே இல்லை எல்லாம் உன்னால்தான் அடிக்கடி வந்துபோமா என்று சொல்லி வழி அனுப்பினார் ரேவதி. அதன்பின் ஒருவாரம் அமைதியாகச் சென்றது, நந்தனா தனக்குள்ளே ஏதோ யோசனையில் இருந்தாள், அவளாக சொல்லட்டும் என்றெண்ணி அவள் வீட்டில் யாரும் அவளை எதுவும் கேட்கவில்லை. அனைத்திலும் அதிசயமாக இந்த ஒரு வரமாக கதிர் நந்தனாவிடம் பேசவில்லை.

ஒருவழியாக தன் மௌனத்தை கலைத்து அனைவரிடமும் பேசத் தயாரானாள் நந்தனா. அன்று இரவு உணவிற்கு பிறகு குடும்ப சபை கூடியது, சந்தியாவிடம் சொல்லி கதிரையும் வரவைத்திருந்தாள் நந்தனா.

அனைவரையும் பார்த்துப் பேச தொடங்கினாள் நந்தனா, அப்பா இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுனு எனக்கு தெரியல, கண்டிப்பா நா சொல்ல போறது உங்களுக்கு சந்தோசமா இருக்காது. இதுக்கு வேற வழி இருக்கானு எவ்வளவோ யோசிச்சு பார்த்துட்டேன் எனக்கு வேற எந்த வழியும் தோணல அதனாலதான் உங்ககிட்ட பேசிடலானு முடிவுசெஞ்சேன். நான் அர்ஜுன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் என்றவளை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நீ என்ன லூசா, என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறயா என்று கத்தினான் விக்ரம், சாவித்ரியால் தன் மகள் கூறியதை நம்ப முடியவில்லை, இப்படி அனைவரும் பல்வேறு உணர்ச்சியில் இருக்க சந்தியா கதிரிடம் இவ சொல்ற விஷயம் உனக்கு முன்னமே தெரியுமா, ஏன்டா எங்ககிட்ட சொல்லல, அக்கா அவ அர்ஜுன நேசிக்குறன்னு என்கிட்ட சொல்லும்போது அர்ஜுன் யாழினியின் அப்பான்னு எங்களுக்கு தெரியாது. அது தெரிஞ்சப்புறம் இவ முடிவு இதுவதான் இருக்குனு நெனச்சுதான் உங்ககிட்ட அன்னைக்கு எதுக்கும் தயாராயிருங்கனு சொன்னேன் என்றான் கதிர்.

அம்மா எனக்கு யாழினிய ரொம்போ பிடிக்குனு உங்களுக்கே தெரியும், முடிஞ்ச வரைக்கும் அவளை நல்லபடிய பார்த்துக்கனுன்னு எப்பவும் நினைப்பேன் அதே சமயத்துல அர்ஜுன் கல்யாணமானவர், ஒரு குழந்தைக்கு அப்பான்னு தெரியாமதான் அவரை நேசிச்சேன், இந்த திருமணம் நான் நேசிக்குற ரெண்டு பேரையும் எனக்கு குடுக்கும் என்றாள் நந்தனா. முடியாது உன்ன போய் எப்படி நாங்க ஒருத்தருக்கு ரெண்டாவது மனைவியா என்னால அதை கற்பனை கூட பண்ண முடியல இந்த எண்ணத்தை விட்டுடு, இது நடக்காது என்று கோபத்தில் கத்தினான் விக்ரம். அவன் அருகில் சென்ற நந்தனா அண்ணா நான் உங்கள கட்டாயப்படுத்த மாட்டேன், கோபத்துல திட்டு, அடிக்க கூட செய் ஆனா சில பேர் மாதிரி என்கிட்ட பேசாம மட்டும் இருந்துடாத என்று கதிரை பார்த்துக்கொண்டே சொல்லியவள், அழுதுகொண்டு அவள் ரூமில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அவள் செல்வதைப் பார்த்து வேதனையோடு கண் மூடிக்கொண்டான் கதிர், எதுவும் சொல்லாமல் சதாசிவம் எழுந்து சென்றுவிட்டார், இறைவா இந்த வீட்டுல என்ன நடக்குது, என் குழந்தைங்க கலங்கி நிக்குறாங்க, நீதான் வழிசொல்லணும் இறைவா என்று வேண்டத் தொடங்கினார் சாவித்ரி, கோவம் குறையாமல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான் விக்ரம், நந்தனா யாரையாவது காதலித்தா அவளுக்கு சப்போர்ட் பண்ணனும் என்று நினைத்திருந்த சந்தியாவாள் கூட நந்தனா சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அந்த இரவு அனைவருக்கும் கனமாக நகர்ந்தது.

மறுநாள் அதிக பேச்சுக்கள் இன்றி கழிந்தது, இப்படி ஒருவாரம் செல்ல யாழினிக்காக விடுப்பு எடுத்திருந்த அர்ஜுன் அலுவலகம் வரத் தொடங்கினான், வந்தவுடன் அவன் கவனத்தில் பட்டது நந்தனாவின் வாடிய முகம், ஈவினிங் வீட்டுக்குப் போறப்ப கூட  பிரெஷா இருப்பா என்ன ஆச்சு இவளுக்கு என்றெண்ணி அவளை அவனது அறைக்கு வர சொன்னான். வந்தவுடன் சார் நீங்க சொன்ன இந்த ஒர்க்லாம் முடிஞ்சுது என்று அவன் கண்ணை பார்க்காமல் பேசத் தொடங்கினாள், அவளை கை காட்டி தடுத்தவன், நான் அதுக்கு கூப்பிடல என்ன  ஆச்சு உனக்கு, ஏன் இவ்வளவு டல்லா இருக்க என்றான். வந்தவுடன் தன்னைக் கவனித்து அவன் கேட்ட கேள்வி அவளுக்கு கண்ணீரை வரவைத்தது.

இமை தாண்டாமல் கண்ணீரைத் தனக்குள் விழுங்கியவள் உடம்பு சரி இல்லை என்று கூறினாள், அப்ப வீட்டுக்கு கிளம்பு உடம்பு சரியில்லாம உன்ன யாரு வர சொன்னது, கிளம்பு என்றான். தன்னால் அவனைப் பார்த்துக்கொண்டு இயல்பாக இருக்க முடியாது என்றெண்ணி அவளும் சரி என்று சொல்லி கிளம்பினாள். கதவருகில் சென்றவளை அழைத்தவன் எப்பவும் பிரெஷா துரு துருனு இருக்க நந்தனா தான் அழகு, இந்த நந்தனா நல்லாவே இல்லை சீக்கிரம் சரியாகி வா என்றவனை தன்னை மீறி ஒருநிமிடம் பார்த்தவள்  வேகமாக அங்கிருந்து வெளியேறினாள். அர்ஜுன் வந்த உடன் நந்தனாவை அழைத்தது அடுத்த 10 நிமிடத்தில் அவள் வீட்டுக்கு சென்றது அனைத்தையும் பார்த்த கதிர், அதை விக்ரமிடம் தெரிவித்தான்.

மறுநாள் காலை அலுவலகம் செல்லாமல் விடுப்பு எடுத்துவிட்டு வீட்டுல உக்காந்து வேலைக்கான விளம்பரங்களைப் பார்வை இட்டுக்கொண்டிருந்த தங்கையை யோசனையோடுப் பார்த்தான் விக்ரம். அன்று மாலை நந்தனாவைத் தவிர மற்ற அனைவரும் ஒரு பார்கில் அமர்ந்திருந்தனர். என்னடா விக்ரம் எதுக்கு எல்லாரையும் இங்க வரச் சொன்ன என்று சாவித்ரி கேட்டார், அம்மா, அப்பா இன்னும் எவளோ நாள் இப்படி வீட்டுல எல்லாரும் அமைதிய இருக்க போறோம், நந்தனா நமக்கு பிடிக்கலைனு சொன்னதுல இருந்து அதுக்கு மரியாதை குடுத்து நடக்குற, என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்கன்னு சொன்னா ஆனா நம்ப யாரு அவகிட்ட ஒழுங்க பேசுறதுல்ல, என்னால நந்தனாவை இப்படி பாக்க முடியல இதுக்கு முடிவுதான் என்ன என்று கேட்டவனைப் பார்த்த சதாசிவம்,

ஏன் விக்ரம் ஏதோ ஒரு காரணத்துக்காக நாங்க சந்தியாவை நீ திருமணம் பண்ணிக்க கூடாதுனு சொல்லி இருந்த நீ என்ன செஞ்சிருப்ப என்றார், தலையை குனிந்தபடி உங்கள் பேசுச்சுக்குக் கட்டுப்பட்டு நடந்திருப்பேன் என்று சொன்னான் விக்ரம், பேச்சுக்கு கட்டுப்பட்டிருப்ப சந்தோசம இருந்திருப்பயா என்றார், இல்லை என்றான் விக்ரம். சந்தியாவை மறந்து வேற பொண்ண கல்யாணம் செஞ்சிருப்பயா? என்றார் தந்தை. எப்படிப்பா முடியும் என்றவன் தந்தை சொல்லவருவது புரிந்து அமைதியானான்.

உன்னால முடியாத ஒன்றை உன் தங்கச்சிய செய்ய சொல்றது நியாயமா என்றார். அதுக்காக நம்ப பொண்ண எப்படிங்க ரெண்டாந்தாரம குடுக்குறது என்று இடைமறைத்த சாவித்திரியை பார்வையால் அடக்கியவர், கதிரிடம் திரும்பி நீ ஏன்டா நந்தனா கிட்ட பேசாம இருக்க என்றார், எப்படி அப்பா பேசசொல்ரீங்க அவகூட பேசுனா அவகேக்குற எதையும் என்னால முடியாதுனு சொல்ல முடியாது, அதான் அவளை விட்டு தள்ளி இருக்கேன், அப்ப உனக்கு இதுல விருப்பம் இல்லையா என்றார். எனக்கு நந்தனா சந்தோசம் முக்கியம், கூடவே அது உங்க எல்லார் சம்மதத்தோட நடக்கனும் அவ்ளோதான், எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க அவளை இப்படி என்னால பாக்க முடியலை என்று கண் கலங்கியவனை ஆதரவாக அணைத்துக்கொண்டான் விக்ரம்.

உங்க எல்லாருக்கு என்மேல நம்பிக்கை இருக்குல்ல அப்ப இந்த விசயத்துல நான் என்ன செஞ்சாலும் நீங்க அமைதியா இருக்கனும் என்றவர் பேச்சுமுடிஞ்சதாக அங்கிருந்து கிளம்பினார்.