கனவு 1
அந்த அதிகாலை விடியும்போதே அத்தனை அழகாய் இருந்தது.
மாற்றங்கள் நிரம்பிய அவள் வாழ்வில் எவ்வளவோ இனிமையான சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. ஹரிதாவுக்கு காப்பி என்றால் கொள்ளை இஷ்டம். அவள் அந்த காப்பியை ரசித்து பருகியபடி பால்கனியில் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஸ்கூல் செல்ல நேரம் ஆகிவிட்டதென்று அம்மா எப்பவும் போல சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் 10 ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி நினைவுகள் என்றதும் அவள் மனம் ஒரு நிமிடம் யோசித்தது. அடுத்து ஆண்களுடன் சேர்ந்து படிக்கும் பள்ளியில் படிக்க வேண்டும் என்று அவள் அப்பா சொல்லியிருந்தார். இப்போது முழுக்க பெண்கள் படிக்கும் பள்ளியில்தான் அவள் படித்து வந்தாள். அப்பா அப்படி சொல்ல காரணமும் இருந்தது. ஹரிதா ரொம்ப கூச்ச சுபாவம் மிக்கவள். பேசுவதற்கே தயங்குபவள். இது தவிர அந்த ஊரில் நல்ல ஸ்கூல் அதாவது மேல்படிப்புக்கென்று வேறு பள்ளி கிடையாது. என்னமா என்ன யோசனை என்றபடி வந்தார் சிவராமன். ஒண்ணுமில்லை நிச்சயம் அந்த ஸ்கூலில்தான் சேரனுமா என்றாள். இதோ பாரும்மா நீ இப்படி தயங்கி தயங்கி நிக்கிறதை பார்க்கவே கஷ்டமா இருக்கு. எதையும் நீ ஃபேஸ் பண்ண பழகிக்கணும் அதுதான் அப்பாவோட ஆசை என்றார்.
சௌமியா ஸ்கூலில் அவளுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்.என்னடி ஹரிதா எப்பவுமே ட்ரீம்ஸ்தானா .. என்றாள்.அதெல்லாம் ஒண்ணுமில்லை ஒரு பயம் லேசா இருக்கு அதுதான். இப்படியே நீ பயந்தா ஒண்ணும் சரியா வராது. நீ எப்பவும் போல இருக்காம கொஞ்சம் தைரியமா இருக்க டிரை பண்ணு. நாங்கெல்லாம் உன் கூடவே இருக்கிறோம் என்றாள். ஹரிதா பேரழகியெல்லாம் இல்லை. சௌமியா நல்ல அழகு. இருவரும் சிறு வயது முதலே பள்ளித்தோழிகள். சௌமியா ஹரிதாவுக்கு அப்படியே நேரெதிர் . அவள் மனதில் பட்டதை பேசுவாள். எக்ஸாம்சுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தது. ஹரிதாவுக்கு எல்லாமே வேகமாய் நடப்பதாய் தோன்றியது.தான் அறியாமையில் மூழ்கி கிடப்பதாய் அவளுக்கு தோன்றியது. அவளுக்கு பிடித்த டீச்சர் பிருந்தா வீடு அவள் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருந்தது. அங்கேதான் மாலை நேர பாட வகுப்புகளுக்கு சென்று வந்தாள். அன்றும் போயிருந்தாள். 6 மணி அளவில்தான் வகுப்புகள் நடக்கும். அன்று டீச்சர் வெளியே போயிருந்ததால் வகுப்புகள் நடக்காதென்றும் அதனால் வீட்டுக்கு போக விரும்புகிறவர்கள் போகலாம் மற்றவர்கள் வீட்டு பாடம் எழுதலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
சரி வீட்டுக்கு போகலாம் என முடிவெடுத்த போது அப்போது தான் அவன் வந்தான். அவன் பார்க்க உயரம் குறைந்தவனாக இருந்த போதும் கனிவுள்ளவனாக தோன்றினான். டீச்சர் வர லேட் ஆகும் அதனாலே என்னை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்காங்க. இப்போது வகுப்பில் ஹரிதாவும் இன்னும் சில சின்ன பிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். உன் பேரென்ன என்றான்.ஹரிதா. என்ன கிளாஸ் . 10 த் என்றாள் . பார்த்தா 5வது படிக்கிற மாதிரி இருக்கிறே என்று சிரித்தான். இவள் நான் கிளம்புகிறேன் அண்ணா என்றாள் . அண்ணாவெல்லாம் வேண்டாம் நான் பிளஸ் டூ தான். என் பெயர் சமர் என்றான். நீ விரும்பினால் நான் உனக்கு சொல்லி தருகிறேன் என்றான். அதெல்லாம் வேண்டாம் . சரி உன் விருப்பம் . அப்போது கரண்ட் கட் ஆகி விட்டது. எல்லா பிள்ளைகளும் ஓ வென கத்திக்கொண்டு வீட்டுக்கு ஓடினார்கள். சமர் ஒரு மெழுவர்த்தி கொளுத்தி கொண்டு வந்தான். நீ இன்னும் போகலையா ? பயமா இருக்கு .. இருட்டா இருக்கு என்றாள் . நான் உங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணுறேன் . வேண்டாம் அவர் ஊரில் இல்லை என்றாள் . சரி இப்போ இப்படியே என்னை பார்த்துட்டே இருக்க போறியா?.. நீங்களே என்னை வீட்டுல விட்டுடுங்க அண்ணா என்றாள் . ம் அதுவும் சரிதான்.
மணி ராத்திரி 7 30 இருக்கும். இவளை ஸ்கூட்டர் ஒன்றில் அவள் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டான் சமர் . ரொம்ப தாங்க்ஸ் தம்பி என்றாள் ஹரிதா அம்மா. இவளும் தாங்க்ஸ் என்றாள் . அந்த நாள் அவளுக்கு பிடித்திருந்தது. சமர் மறுபடி எப்போது tution வருவான் என அவளையறியாமல் ஆவல் ஏற்பட்டது. மறுநாள் பிருந்தா டீச்சர் ஹரிதாவிடம் விசாரித்தாள். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ஹரிதா சமர்கிட்ட என்றாள் .எதுக்காக டீச்சர் அப்படி சொன்னாள் என புரியவில்லை. பிருந்தாவுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அம்மா மட்டுமே இருந்தார்கள்.அடுத்த வாரம் சமர் வந்திருந்தான். அவள் வீட்டுக்கே வந்து விட்டான். இவள் சற்றே பயந்துவிட்டாள் . எனக்கு நாளைக்கு பர்த்டே எல்லோரும் எங்க வீட்டுக்கு வரணும் என்றான். நாங்க எதுக்குப்பா என்றாள் ஹரிதா அம்மா. அப்போ ஹரிதாவையாவது அனுப்புங்களேன் பிளீஸ் என்றான். சரிப்பா எத்தனை மணிக்கு ஃபங்சன் . 7 மணிக்கு. ஹரிதா சௌமியாவையும் துணைக்கு வர சொல்லி கூப்பிட்டாள். அவள் இதெல்லாம் தேவையில்லாத வம்புடி என்றாள். பாவம் அந்த அண்ணா ஆசையா கூப்பிட்டாங்க .. சரி சரி மூஞ்சை தூக்கி வைத்துக் கொள்ளாதே நாம போவோம். ஆனா அரைமணி நேரம் தான் அதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியாது என்றும் சௌமியா சொன்னாள்.
சமர் இவர்களை வரவேற்றான். சௌமியாவை சமருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ஹரிதா. அவன் கேக் வெட்டும் நிகழ்வில் பிஸி ஆக இருந்தான். ஹரிதா பரிசுப்பொருளை கொடுத்தாள். சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.சௌமியா நேரமாகிவிட்டது போகலாம் என்றாள் . இவளுக்கோ கிளம்பவே மனசில்லை . ஒருவழியாக இருவரும் சமரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர். மறுநாள் ஹரிதா அப்பா நம்பருக்கு சமர் ஃபோன் பண்ணியிருந்தான். ஹரிதா ரொம்ப தாங்க்ஸ் ஃபங்சன் வந்ததுக்கு என்றான். இவள் எதுவும் சொல்லவில்லை. சரி அண்ணா என்று மட்டும் சொன்னாள். என்னை சமர் என்றே கூப்பிடு என்றான். ஓகே சமர் என்றாள் .சமர் நினைப்பிலே இனிமை கூடுவதை நினைத்தாள் ஹரிதா . இதெல்லாம் வெறும் மயக்கம் என சௌமியா சொன்னாள். அவன் நல்ல ஸ்டைல் ஆ தான் இருக்கான் ஆனா நல்லவன் இல்லை என்றாள் சௌமியா. இதை எதிர்த்து பேச ஹரிதாவுக்கு மனம் வரவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் சமருடைய இந்த சந்திப்பு நின்றுதான் ஆக வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவர்களுடைய அடுத்த சந்திப்பு பிருந்தாவால் நடக்கும் என்று அவளுக்கு கற்பனை கூட செய்ய முடியவில்லை.
அன்றும் பிருந்தா டீச்சர் வரவில்லை. மாடல் எக்ஸாம் வேறு இருந்தது.இவளுக்கு டெஸ்ட் வைப்பதாய் சொல்லி இருந்தாள் பிருந்தா. ஹரிதா சயின்ஸ் பாடத்தில் வீக் . அதில்தான் ஹரிதாவுக்கு டெஸ்ட் வைப்பதாய் சொல்லியிருந்தாள். இவள் நன்கு படித்திருந்த போதும் அங்கு சமரை பார்த்தவுடன் மொத்தமும் மறந்துவிட்டது. அவன் மற்ற பிள்ளைகளிடமே கவனமாய் இருந்தாள். இவள் தடுமாறி எழுதி முடித்த பேப்பரை அவனிடம் கொடுத்தாள். என்ன ஹரிதா இப்படியே போனால் நீ பாஸ் ஆவது கஷ்டம் என்றான். இவள் அழ தொடங்கிவிட்டாள் . சரி இன்னும் இரண்டு நாட்களில் டீச்சர் வந்து விடுவார்கள். நான் உனக்கு அதற்குள் சொல்லி தர முயற்சிக்கிறேன் என்றான். அண்ணா அதெல்லாம் வேண்டாம் என்றாள். நீ நாளை மாலை 5 மணிக்கே வந்துவிடு என்றான். இல்லையென்றால் உன் வீட்டில் நான் பேசவா என்று கேட்டான். அதெல்லாம் வேண்டாம் நான் வருகிறேன் என்றாள். அவள் மனம் சற்றே தடுமாறியது. சில நோட்ஸ்களை கொடுத்தான். இவற்றை கவனமாக படி ஹரிதா என்றான்.
ஹரிதாவுக்கு அவன் முன்னாடி அழுததில் வெட்கமில்லை. அவன் அப்படி சொல்லியிருக்ககூடாது என்று நினைத்தாள். சௌமியா இவளிடம் என்னடி ஒரு மாதிரி இருக்கிறாய் அந்த சமர் ஏதாவது பண்ணிவிட்டானா என்றாள் . அதெல்லாம் ஒன்றுமில்லை சௌமியா அண்ணா ரொம்ப நல்லவன் என்று ஹரிதா கூறினாள். அவள் அன்று நன்கு உடை உடுத்தி கொண்டாள். அவள் மனதில் தனக்கு ஏதோ மாறுதல் நடக்க போகிறது அதனால் தான் அவன் 5 மணிக்கு வர சொல்லியிருக்கிறான் என்று நினைத்தாள். அன்று பிருந்தா டீச்சர் வந்து விட்டாள் . கூடவே அவனும் சிரித்தபடி நின்றிருந்தான். இந்த பொண்ணு சயின்ஸ் டெவலப் பண்ணனும் என்றான். பிருந்தா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் நீ போ போய் படி வீட்டுக்கு போ என்றாள். சரி பை அக்கா பை ஹரிதா என்றான். இவளுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது. ஆனால் அதுவும் நல்லதுதான் என்று சொல்லிக்கொண்டாள். ஏதோ ஒரு தனிமை தேவைப்பட்டது. பிருந்தாவுக்கு முதல் நாள் நடந்தது எப்படியோ தெரிந்திருந்தது. சமர் சொன்னான் என்று நீயும் அவன் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போகாதே என்றாள் .
சமரை அதன் பிறகு இவள் பார்க்கவில்லை. அவனும் ஃபோன் பண்ணவில்லை.இவளுடைய பர்த்டே நெருங்கி கொண்டிருந்தது . அவனை இதை சாக்கு வைத்து பார்க்கலாமா என்று யோசித்தாள். பிறகு வேண்டாம் அவனே தேடி வரட்டும் என எண்ணினாள் . அவன் வீடு இவளுக்கு தெரியும். சௌமியாவை கூப்பிட்ட போது அவள் மறுத்துவிட்டாள்.சமருக்கு ஃபோன் பண்ணினாள். அவன் அம்மாதான் எடுத்தாள். அவனுக்கு அம்மை போட்டிருக்கு என்றாள். ஓ அதுதான் அவன் எங்கேயும் வரவில்லையா? அவனை பார்க்கவேண்டும் என நெஞ்சம் துடித்தது. ஹரிதா போனை வைத்துவிட்டாள். அருகில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு போய் சமர் சீக்கிரம் குணமாக மனதார வேண்டிக்கொண்டாள். என்னடி இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலை என்றாள் சௌமியா. அவனைப்பத்தி ஒண்ணுமே தெரியாது. ஆனா அவன் நினைப்பிலே இருக்கிறாய் . சௌமியா இப்போ ஒண்ணும் சொல்லாதே. நான் ஒண்ணும் அவனை காதலிக்கலை என்றாள் ஹரிதா. அப்போ சரி .
ஒரு வாரம் கழித்து tution வந்திருந்தான் . ஆளே மாறிப்போயிருந்தான்.சற்றே நிறம் மாறியிருந்தான். இவளை பார்த்ததும் ஃபோன் பண்ணியிருந்தாயா ? ஆமாம் . ஏன் வந்து பார்க்கவில்லை என்றான். அப்படி எல்லாம் பார்க்கக்கூடாதென்று நினைக்கவில்லை என்றாள். நீ வராமல் இருந்ததே நல்லது. ம் இப்போது எப்படி இருக்கிறாய் சமர் ? ஏதோ இருக்கிறேன். ஏன் இவ்வளவு தள்ளி நின்று பேசுகிறாய் என்றான். அது உனக்கு அப்படி தோன்றுகிறது. ம் நன்றாக பேச கற்றுக்கொண்டு விட்டாய். நாளைக்கு சினிமாவுக்கு போகலாம் வருகிறாயா? அதெல்லாம் வேண்டாம் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். சமர் புன்னகைத்தான். அவளை நெருங்கினான். உனக்கு என்னை பிடித்திருக்கிறதா இல்லையா? சொல்லு என்றான். சமர் என்னை சோதிக்காதே .. நீ நினைக்கிற மாதிரி நான் இல்லை என்றாள் .
அப்போ நான் போகிறேன் . சரி உன் விருப்பம் என்றாள். இனி எனக்கு ஃபோன் பண்ணாதே என்றான். நானும் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன் என்றும் கூறினான். ஹரிதா தன் சுயத்தை மீட்டெடுக்க படாதபாடுபட்டாள். அதோடு இனி அவனை நினைக்கவே கூடாதென்று உறுதி எடுத்துக்கொண்டாள் . அவள் எவ்வளவு தூரம் தாக்குபிடிப்பாள் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.