ninaikkatha neramethu - 15 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 15

நினைவு-15

"மாமா... சத்யா ஃபோன் ஏதும் பண்ணினானா?" பெரும் கவலையுடன் கேட்டார் மங்கையர்க்கரசி. இதோடு இவர் கேட்பது நூறாவது முறையோ ஐநூறாவது முறையோ! அது அந்த கடவுளுக்கும் கூட தெரியாது.

எத்தனை முறை கேட்டாலும் தனது பதில் ஒன்றே தான் என்ற முறையில் பதிலளித்தார் தேவானந்தன்.

"இல்லைமா, உனக்கும் பண்ணலியா?"

இரவு சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தவாறே மங்கையர்கரசி, மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

"எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான் மாமா! போனா... போன வேலையை முடிச்சோமா வந்தோமானு இருக்கணும். அப்படியே நாடோடி மாதிரி ஊர் சுத்த கிளம்பிற வேண்டியது."

"இந்தக் காலத்துப் பிள்ளைகளை ரொம்ப இறுக்கிப் பிடிக்க‌ முடியாதும்மா. பிடிக்கவும் கூடாது. அதுவும் என் பேரன் தகப்பன் சாமி மாதிரி. சின்ன வயசுலயே அதிகப்படியான அனுபவம். எது செய்தாலும் சரியாத்தான் இருக்கும்." மெச்சுதலாய் சொன்ன மாமனாரின் சமாதானங்கள் எதுவும் தாய் மனதை குளிர்விக்கவில்லை.

தாத்தாவிற்கு பேரனின் மீது அபார நம்பிக்கை. சிறுவயதிலேயே சத்யாவின் சாதனைகளும் அதற்கான சான்றாய் அமைந்திருக்கின்றன. தந்தையின் தொழிலோடு மட்டும் நில்லாது, தனது தனிப்பட்ட திறமைக்காகவும் பில்டிங் கட்டமைப்பில் தனக்கென தனிமுத்திரை பதித்தவன். 

டெக்ஸ்டைல்ஸ் தொழில் சம்பந்தமாக சூரத் சென்று இரண்டு வாரங்களாகிறது. சென்றவன் அப்படியே ஊர் சுற்றக் கிளம்பி விட்டான். அவனுக்கும் பிடித்த ஒரே விஷயம், எங்கு போகிறோம் என்று முடிவு செய்யாமல் கால் போனபோக்கில் ஊர்சுற்றுவது.

வாகனம் எதுவாகவும் இருக்கும். இரயிலாகவும், பேருந்தாகவும், சில சமயங்களில் லிஃப்ட் கேட்ட இருசக்கர வாகனமாகவும் கூட இருக்கும். அந்த சமயங்களில், அம்மாவைத் தொடர்பு கொண்டு, ‘இத்தனை நாட்களில் வந்து விடுவேன்’‌ என்று தகவல் சொல்லி விடுவான்.

மறுபடியும் திரும்பும் நாளில்தான் தொடர்பு கொள்வான். இந்த முறை அவன் வியாபாரத் தொடர்பாக சூரத் சென்றவன், வீடு திரும்ப இரண்டு வாரங்களாகும் என்று கூறி விட்டுத்தான் கிளம்பினான்.

அவன் கூறிச் சென்ற நாட்களைத் தாண்டியும் வீடு வந்து சேராததால், மாமனாரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். தாமதமானால் அவன் அழைக்கும் செல்பேசி அழைப்பும் வராமல் போக, தாயின் மனம் நிலையில்லாமல் தவித்துப் போனது.

"அவன் சின்ன பிள்ளை இல்ல... வந்துருவான்மா! போனவாரமே பிஸினஸ் ஆர்டர் மெயில்ஸ் எல்லாம் வந்திருச்சு. போன வேலையை முடிச்சுட்டான். எப்படியும் இந்த வாரம் வந்துருவான்." என்று மருமகளுக்கு ஆறுதல் கூறினார்.

மாமனாரின் பதிலால் சற்று நிம்மதியானாலும், பெற்றமனம் எதையோ உணர்ந்து தவித்தது. சீக்கிரம் மகனைக் காண வேண்டும் என்று மனம் படபடத்தது. 

 **********

இதமான இளங்காலை நேரம். செஞ்சாந்தாய் கீழ்வானம். காதலியை துரத்தும் காதலனாய் இளங்காற்று. முந்தானை பறக்க காதலனிடம் வளைந்து நெளிந்து ஓடி போக்கு காட்டும் காதலியாய் நெல்நாற்று.

இவர்களின் விளையாட்டு சிலசமயங்களில் சுழற்றியடித்து ஆக்ரோஷமாய். பல நேரங்களில் ஆனந்த தழுவலாய் தழுவி சுகப்படுத்தியது. ஈரவயலின் சேற்று வாடையும், நெல்மணிகளில் பால்முதிரும் பச்சை வாசனையும் சேடிப் பெண்களாய் இருக்க, யாருக்கு வேண்டும் விண்ணுலக சொர்க்கம்! இதோ காலடியில் பூலோக சொர்க்கம் இயற்கையின் வடிவில் இறைவன் ரூபமாய் இருக்கின்றதே அதுவே போதும்!

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வலதுகாலை மட்டும் ஊன்றி நின்று கொண்டு வயல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தவன். ஆழ்ந்த மூச்செடுத்து அதிகாலை ஈரக்காற்று கொண்டு நுரையீரல் நிரப்பினான்.

"கண்ணா!"

லட்சுமியின் அன்பான குரல், நுரையீரல் நிரம்பிய ஈரக்காற்றுக்கு இணையாக அவனைத் தீண்டியது. குரல் கேட்டவன் திரும்பிப் பார்க்க கையில் காஃபி டம்ளரோடு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவன் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. 

அவனைப் பற்றிய தகவல் அறியும்‌ பொருட்டு காவல் நிலையம் சென்றவரை,

"என்ன சண்முகம் சார் இந்தப்பக்கம்?" என‌ அவரை அடையாளம் தெறிந்த கான்ஸ்டபிள் ஒருவர் கேட்க,

"பத்து நாளைக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் ஆச்சுல. அது சம்பந்தமாக விசாரிச்சுட்டுப் போக வந்தேன்."

"எதை சொல்றீங்க. மூனு பேர் ஸ்பாட்அவுட் ஆன கேஸா?"

"ஆமாங்க... அதுல ஒரு பையன் கூட பொழச்சுக்கிட்டானே. அவனைத் தேடி யாராவது வந்தாங்களா? இல்ல… அவன் யாருங்கற தகவல் தெரிஞ்சுதானு பாத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன்."

"எங்க சார்? ஆக்சிடென்ட் ஆன இடத்துலயும் அவனோட திங்க்ஸ் ஒன்னு கூட இல்ல. கூட்டத்துக்குள்ள திருட்டு பயலுக தூக்கிட்டானுகனு நினைக்கிறேன். கண்ணு முழிச்சவனும் இசகுபிசகா அடிபட்டதுல பைத்தியம் ஆயிட்டதா தகவல் வந்துச்சு."

"சார்! அவனுக்கு பைத்தியமில்லை. ஞாபகமறதி. எங்க இருக்கோம். என்ன பண்றோம்னு தெரியாம பண்றவங்களுக்குப் பேருதான் நீங்க சொல்றது. இவனுக்கு நாளைக்கே கூட நினைவு திரும்ப வாய்ப்பிருக்கு." என்றார் கான்ஸ்டபிள் சொன்ன வார்த்தையை பொறுக்க மாட்டாதவராக.

"சரி சார்... கோபப்படாதிங்க… நமக்கு தெரிஞ்சதை தான சொல்ல முடியும்."

"அப்படியில்லை சார்... பையனுக்கு சின்ன வயசு. அதுதான் அந்த வார்த்தையைக் கேட்டதும் பொறுக்க முடியல. மனிதாபிமானத்தோட யோசிக்கலாம்ல."

"ம்ம்… பத்து நாள் ஸ்டேஷன்ல வந்து உக்காந்து பாருங்க. நாலு ஆக்ஸிடென்டு, ரெண்டு கொலைக்கேசு, நாலு அடிதடி, வெட்டு குத்து, பத்து திருட்டுப் பயலுகன்னு பாருங்க... மனிதாபிமானம் எங்க போகுதுன்னு பாக்கலாம்." என்று கூறிவிட்டு சிறித்தார்.

இடத்திற்குத் தகுந்த மனநிலை. வாய் பேசுவதைவிட கை அதிகம் பேசுமிடம். சண்முகமும் அதற்கு மேல் பேசாமல் தான் வந்த விவரத்தைக் கூறினார். 

சண்முகம் அந்தப் பகுதியில் கொஞ்சம் பரிட்சயமானவர் என்பதால் இவரிடம் அதிக கேள்விகள் கேட்கவில்லை. காவல் நிலையத்தில் முறைப்படி எழுதிக் கொடுத்துவிட்டு, உறவுக்காரர்கள் வந்தவுடன் ஒப்படைக்க ஒப்புதல் அளித்துவிட்டு, அவனை அழைத்து வந்து விட்டார். விபத்து நடந்த சுற்றுவட்டார காவல் நிலையங்களிலும் இவனுடைய அடையாளத்துடன் இதுவரை எந்த புகாரும், காணவில்லை பிரிவிளலும் பதிவாகவில்லை.

புதிய இடம். அவனை ஆர்வமாய் பார்வையிட்ட சிறு பிள்ளைகள். அவர்களோடு திவ்யாவும் அன்று அங்கிருந்தாள். அவனுக்கு பரிட்சயமான இருவரில் அவளும் ஒருத்தி என்பதால் அவளைப் பார்த்ததும் ஒரு சிநேகப் புன்னகை புரிந்தான்.

சண்முகம் லட்சுமியையும், மற்றவர்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தியவர், பிள்ளைகளிடமும் அவனை அறிமுகப்படுத்தினார்.

புதிதாக ஒரு உறவு வந்ததில் அவர்களுக்கும் சந்தோஷம். 

"வாப்பா… முதல்ல வந்து குளி! அப்பதான் உடம்பும் மனசும் சுறுசுறுப்பாகும்." என‌ லட்சுமி அழைத்தார். குளியலறையில் வெந்நீர் விளாவி வைத்தார்.

காலில் ஈரம் படாமல் நாற்காலியில் தூக்கி வைத்து விட்டு, சங்கோஜமாக உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் சண்முகம் மற்றும் சதீஷின் உதவியுடன் குளித்துவிட்டு வந்தான்.

"இப்போதைக்கு இதைப் போட்டுக்கப்பா." என்று சண்முகத்தின் வேட்டி சட்டையை லட்சுமி கொடுத்தார். 

அவனை ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவர், "ஏங்க… பையனப் பாத்தா பெரிய வீட்டுப்புள்ள மாதிரி இருக்கேங்க. தாடியும், முடியுமா இருக்கறப்பவே அம்சமா இருக்கானே?" என்று சண்முகத்திடம் மெதுவாக கூற,

"நானும் அப்படித் தான் நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் தேடி வந்துருவாங்க." எனக் கூறினார்.

குளித்து விட்டு வந்தவனை சூழ்ந்து கொண்டு பிள்ளைகள் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்டனர். “எங்கிருந்து வந்திருக்கீங்க?”

“உங்கபேரென்ன?”

“என்ன படிச்சிருக்கீங்க?” இப்படி பட்டியல் நீண்டது. 

"பிள்ளைகளா... அண்ணாகிட்ட அப்புறமா கேள்வி கேட்டுக்கலாம். இப்ப அண்ணன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும். இப்ப விலகுங்க! " என்று லட்சுமி கூற,

"சரிம்மா. பேரையாவது சொல்லச் சொல்லுங்க." என்றது விடாப்பிடியாக ஒரு சின்ன வாண்டு.

"ஆன்ட்டி! நீங்க என்ன‌ சொன்னாலும் கேக்க மாட்டாங்க. என்ன பேருன்னாவது சொல்லி அனுப்புங்க." என்று திவ்யா கூற,

"அதானே, நமக்கும் கூட கூப்பிடறதுக்கு பேரு வேணுமில்ல. வாப்பா போப்பானேவா கூப்பிட முடியும்." என்று லட்சுமி கூறினார்.

 

பிறகு அவரே யோசித்து, "கண்ணானு கூப்பிடலாம். மறுபடியும் அவங்க குடும்பத்தோட சேருகின்ற நேரம் வரும் வரைக்கும் கண்ணனா நம்ம கூட இருக்கட்டும்." என்று வளர்ந்த பிள்ளைக்கு அழகான பெயரையும் வைத்தார்.

பிள்ளைகள் ‌சூழ அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில் திவ்யாவிற்கும் அப்படித்தான் தோன்றியது கோகுலக் கண்ணனாக!

மருத்துவமனை சூழலில் இருந்தவனுக்கு, இயற்கையோடு சேர்ந்த புதிய‌ இடம் பெரிய மாற்றத்தை மனதளவில் ஏற்படுத்தியது. அதுவும் கள்ளங்கபடமில்லா பிள்ளைகளோடு பழக ஆரம்பித்தவனுக்கு... அனைத்தும் மறந்த நிலையில்... அவனுக்கும் புதிதாக பிறந்த உணர்வு. 

தான் இங்கு வந்து சேர்ந்த நாளின் நினைவுகளோடு லட்சுமியை எதிர் கொண்டவன், "நீங்க ஏம்மா வந்தீங்க… நானே வந்திருப்பேனே?" என்றான் காஃபி டம்ளரைக் கையில் வாங்கியவாறே.

"ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கியே கண்ணா... கால் வலிக்கலையா?"

"வயல்வெளியப் பாத்துட்டு இருந்தா கால் வலியெல்லாம் பறந்திடுது. வலியொன்னும் முன்ன மாதிரி இல்லைமா." அன்பான உரிமையான பேச்சி இருவருக்கிமிடையே நடைபெற அதைப் பார்க்கவே அத்தனை அழகு!

"இன்னைக்கி உன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்னு சொன்னாங்கள்ல... குளிச்சுட்டு ரெடியாகு கண்ணா! இன்னைக்கு ஞாயித்துக்கிழமையா இருக்கிறதால திவ்யாவுக்கும் காலேஜ் லீவு. அதனால திவ்யாவும் உங்க கூட வர்றதா சொல்லியிருக்கு."

"சரிங்கம்மா." என்றவாறு காபியைக் குடித்தவன் குளிக்கச் சென்றான். இப்பொழுதெல்லாம் காலில் ஈரம் படாமல் தானாகவே குளிக்கப் பழகிக் கொண்டான்.

பிள்ளைகளும் எழுந்து தங்கள் காலைப்பணிகளை மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இந்த ஒருநாள் மட்டும் பிள்ளைகளுக்கு மோட்டார் பம்ப்செட்டில் குளிக்க சண்முகம் அனுமதி கொடுத்திருந்தார்.

அதுவும் சற்று பெரிய பிள்ளைகளுக்குதான். சிறுபிள்ளைகளுக்கு தண்ணீர் ஓடும் வாய்க்காலில் குளிக்க தான் அனுமதி. சண்முகமும் உடனிருப்பார். வயல் வேலைக்கு வருபவர்களும் பார்த்துக் கொள்வர்.

ஆட்டமும் பாட்டமுமாக குளித்துவிட்டு வந்த பிள்ளைகள், சாப்பிட்டு விட்டு விளையாடச் சென்றனர். விடுமுறை நாளின் இனிமையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

"திவிக்கா வந்துட்டாங்க… எல்லோரும் வாங்க!" என்று சதீஷின் கூக்குரல் கேட்டது.

திவ்யா அப்பொழுது தான் ஸ்கூட்டியில் பாப்பாத்தியோடு வந்து இறங்கினாள்.

"ஏன்டா இப்படிக் கத்துற?" என சற்று அதட்டலாகக் கேட்டவாறே லட்சுமி வந்தார்.

"அம்மா நாங்கெல்லாம் காக்கா மாதிரி... ஒரு வடையப் பாத்தாலே ஊரையே கூப்பிடுவோம். திவிக்கா வந்திருக்காங்கள்ல... எப்படியும் சாக்லேட்டோட தான் வந்திருப்பாங்க. அதுதான் எல்லோரையும் கூப்பிடுறேன்."

தன் பெற்றோருடன் இங்கு வரும் பொழுதெல்லாம் சாக்லேட்களை பிள்ளைகளுக்காக கொண்டு வருவது திவ்யாவின் வழக்கம். சதீஷும் அதை எதிர்பார்த்துதான் பிள்ளைகளைக் கூப்பிடுகிறான் எனத் தெரிந்துதான் லட்சுமி, சதீஷை அதட்டியது.

பிள்ளைகளின் எதிர்பார்ப்பை அறிந்தவள் சாக்லேட்டோடு தான் வந்திருந்தாள். 

"டேய் சதீஷ்... இப்ப தான்டா நீ காக்காங்கற உண்மைய ஒத்துகிட்ட." எனக் கூறியது அவர்களுள் ஒருத்தியான தேவி. 

அவன் கொஞ்சம் கருப்பு என்பதால் அதைக் குறிப்பிட்டு கூறினாள்.

"ஒரு வருங்கால எம்.எல்.ஏ. வைப் பாத்து என்ன வார்த்தை சொல்லிட்ட!''

"இது எப்ப இருந்துடா?" என திவ்யா கேட்க,

''நேத்துல இருந்துக்கா... சோழ பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ!" என மேலே‌ பார்த்தவாறே கூற,

"ஏன்டா... நேத்து டிவில அமைதிப்படை படம் பாத்தியா?" என‌ திவ்யா கேட்டாள்.

"ஆமாக்கா!"

"டேய் அதுல ஹீரோ பேரும் அமாவாசை தான்டா!" என்று தேவி மீண்டும் கூற, அதைக் கேட்டு திவ்யா சிறிது நாட்களுக்குப் பிறகு அன்றுதான் சிரித்தாள்.