ninaikkatha neramethu - 19 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 19

நினைவு-19

சண்முகமும் லட்சுமியும் ஓரளவுக்கு திவ்யா வீட்டில் பொருத்திக் கொண்டனர். பாதி வெள்ளாமையில் இருந்த விளைநிலங்களை ஆட்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு திவ்யாவின் வீட்டிற்கு குடி வந்து விட்டார்கள்.

அவர்களிடம் பிள்ளைகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, திவ்யா அக்காவுக்காக சிறிது நாள் தங்கி விட்டுப் போகலாம் என சொல்லப்பட்டது. தோட்ட வீட்டில் விசாலமாக இருந்தவர்கள், சற்று சிரமப்பட்டாலும் பழகிக் கொண்டனர்.

சண்முகமும் பிள்ளைகளை, எந்த இடத்திலும் பொருத்திப் போகும்படியாகத் தான் வளர்த்திருந்தார். எனினும் புது இடம் சில பிள்ளைகளுக்கு பிடித்தமாயும், சில பிள்ளைகளுக்கு பிடித்தமின்மையாகவும்.

"அதென்னமா கணக்கு? பதினஞ்சு பிள்ளைக..." என்று கண்ணன் எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைக்க உதவிக் கொண்டே கேட்டான்.

"அதுவா கண்ணா... இவர் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பனிரெண்டு பிள்ளைகளாம்! அந்த காலத்துல அதெல்லாம் சாதாரணம். இவரும் சின்னப் பிள்ளையா இருக்கும் போது தாத்தாகிட்ட, நான் உங்களை முந்தி காட்டுறேனு பந்தயம் கட்டுனாராம்." என்று நமட்டுப் சிரிப்போடு லட்சுமி சொல்ல,

"பாத்திங்களா அண்ணா! எல்லோரும் எதெதுக்கோ பந்தயம் கட்டினா, எங்கப்பா எதுல கட்டியிருக்கார் பாருங்க!" என்று கூறியவாறே சதிஷ் வந்தான்.

"திவ்யா குடும்பமும், நீங்களும் சொந்தமா?" என கண்ணன் கேட்க,

"அதெல்லாம் இல்லப்பா... இப்ப நீ கேட்ட மாதிரி தான் திவ்யா அப்பாவும் கேட்டாங்க! ஆனா வேற மாதிரி..."

திவ்யாவின் பெற்றோர் வேலை செய்த பள்ளியில் தான், சண்முகமும் தனது பிள்ளைகளை சேர்த்திருந்தார். பதினைந்து பிள்ளைகளோடு அவரைப் பார்த்த திவ்யாவின் தந்தை, "ஏங்க உங்களால வளக்க முடியுங்கறதால, அந்தக்காலம் மாதிரி இத்தனையா?

ரெண்டோ, மூனோ கூட பெத்துகிட்டு, வசதி இல்லாத பிள்ளைகளுக்கு உதவியிருக்கலாமே?" என்று கேட்க,

"அதுக்கென்னங்க! அதையும் பண்ணிட்டாப் போச்சு!” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சென்று விட்டார் சண்முகம்.

அதன்பிறகு தான் சண்முகத்தைப் பற்றி, தெரிந்து கொண்டவர், அவரைத் தேடிச்சென்று நட்பு கொண்டார். இரு குடும்பங்களும் சொந்தங்களைத் தாண்டிய பந்தமாக பழக ஆரம்பித்தனர்.

பழைய கதைகளை பேசிக்கொண்டே, வேலைகளை முடித்தனர். பொருட்கள் கடையிலிருந்து கொண்டு வரப்பெற்று, தற்காலிக சமையற்கட்டும், சாப்பாட்டுக் கூடமும் அமைக்கப்பட்டது. குளியலறையும் வெளிப்புறத்தில் அதிகமாக இரண்டை கட்டிக் கொண்டனர்.

கண்ணன், சதிஷ் மற்றும் ஆண்பிள்ளைகள் அனைவருக்கும் மாடியறை ஒதுக்கப்பட்டது. சண்முகம், லட்சுமி மற்றும் பெண்பிள்ளைகளுக்கு, திவ்யா தன் பெற்றோரின் அறையை ஒதுக்கிக் கொடுத்தாள்.

“நாங்க எங்கே வேணாலும் படுத்துக்கறோம்மா!” என்று ஆத்தாக்கள் இருவரும் கூறி விட்டனர். ஒருவழியாக அனைத்தும் செட்டிலாக, கண்ணனும் தானும் கடைக்கு வருவதாக சண்முகத்துடன் கிளம்பி விட்டான்.

வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு, வெளியே சென்றாலாவது, தன்னைத் தெரிந்தவர்கள் யாரையாவது சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில் தான் அவன் அவ்வாறு கிளம்பிச் சென்றது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. மதியம் வரையிலும் ஹார்டுவேர் கடை இருக்கும். சண்முகமும், கண்ணனும் காலை‌ உணவை முடித்துக் கொண்டு கிளம்ப, திவ்யா பிள்ளைகளோடு தோட்டவேலை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

ஒன்றுக்கொன்று விளையாடிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். செடிகளை கொத்திவிட்டு, உரம் போட்டு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தனர்.

"இன்னைக்கு சன்டே... நம்ம வீட்ல இருந்திருந்தா ஜாலியா பம்ப்செட்ல குளிச்சிருக்கலாம்." என்று பிள்ளைகள் அங்கலாய்க்க,

"அதுக்கென்ன? இப்ப மழையிலேயே குளிக்கலாம்." என்ற சதீஷ் தண்ணீர் குழாயின்‌ முனையை இறுக்கிப் பிடித்து வானத்தை நோக்கி திருப்பி பிடிக்க, பூமழையாய் தண்ணீர் சிதற ஆரம்பித்தது. 

"ஐ…! ஜாலி. சதீஷ் அண்ணா இங்க, அண்ணா இங்க…” என மாற்றி மாற்றி பிள்ளைகள் குதூகலிக்க, சதீஷிடமிருந்து குழாயைப் பிடுங்கிய திவ்யா பிள்ளைகள் மேல் அடித்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.

அனைவரும் தெப்பலாக நனைந்து விளையாடிக் கொண்டிருக்க, அப்பொழுது தான் கண்ணன், லட்சுமி சமையலுக்குப் கேட்ட காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவன் வண்டியை நிறுத்த, இவர்களின் விளையாட்டு சத்தம் வெளிவரை கேட்டது. 

பட்டாம்பூச்சி கூட்டத்தின் நடுவே, துள்ளும் மானாய் அவள். கையில் பையோடு கேட்டைத் திறந்தவன், சிறு பிள்ளைகளோடு சிறு பிள்ளையாய் விளையாடிக் கொண்டிருந்தவளைக் கண்ணிமைக்காமல் பார்க்க... சட்டென்று மூளைக்குள்‌ அலாரமடித்தது. பார்வை பக்கத்து வீட்டு மாடியை நோக்கிச் செல்ல, அன்று வக்கிரமாய் திவ்யாவை ரசித்த உருவம் வேகமாக உள்ளிழுத்துக் கொண்டது.

"இவனை..." என்று பல்லைக் கடித்தவன், அதே கோபத்தொடு சென்று, குழாயைத் திருகி தண்ணீரை நிறுத்தினான். தண்ணீர் வருவது நின்றதில் பிள்ளைகள் அமைதியாக முழிக்க,

"எல்லோரும் போய் ட்ரெஸ் மாத்துங்க... ரொம்ப நேரம் தண்ணில விளையாண்டா உடம்புக்கு ஒத்துக்காது!" என்று அதட்டலைப் போட்டு அனுப்ப நினைத்தான் கண்ணன்.

"அண்ணா! ப்ளீஸ்ண்ணா! இன்னும் கொஞ்சநேரம்” என்று பிள்ளைகள் அடம்பிடித்தனர்.

"இப்ப அண்ணே சொல்றதைக் கேட்டிங்கனா சாயங்காலம் உங்கள பார்க்குக்கு கூட்டிப் போவேன்." என்று கூற, பிள்ளைகளும் அரைமனதாக சரி எனக் கூறி விட்டு சென்றனர். பிள்ளைகளை அனுப்பியவன் திவ்யா பக்கம் திரும்பினான்.

வெள்ளை குர்தாவும், கருப்பு லெகினுமாக நீர் சொட்டச்சொட்ட நின்றிருந்தாள். அவன் பார்வை உச்சிமுதல் பாதம் வரை அளந்தது. வெள்ளை உடை வெள்ளை மனம் கொண்டவர்களைப் போல. எப்பொழுதும், உள்ளிருப்பதை பட்டவர்த்தனமாகக் காட்டும். அதுவும் நனைந்த நிலையில் இன்னும் ஆபத்தாக. அதைப் பார்த்தவன் கோபம் இன்னும் அதிகமாக,

"அறிவில்ல உனக்கு!" என்று உச்சஸ்துதியில் ஆரம்பிக்க… விக்கித்து நின்றாள் திவ்யா.

"அவங்க தான் சின்னபுள்ளைக... விவரம் பத்தாது. உனக்கு எங்க போச்சு புத்தி. அக்கம்பக்கம் பாக்க மாட்ட? மதமதனு வளந்திருக்கியே! இப்படிதான் ஈர ட்ரெஸ்ஸோட வெளிய நிப்பாங்களா? முதல்ல போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு."

மரியாதையெல்லாம் காற்றில் பறந்து ஒருமைக்கு தாவியது கோபத்திலும், அக்கறையிலும் கண்ணனி வார்த்தைகள்.

'என்னாது..? மதமதன்னா...? எங்கம்மாவே பரவாயில்ல போலிருக்கே.' என்று எண்ணிக் கொண்டே உடைமாற்றச் சென்றாள் திவ்யா.

தனதறை சென்று கண்ணாடியில் தன் தோற்றம் பார்த்தவள், "ஐயயோ! இப்படியேவா வெளிய நின்னோம். சரிதான். கண்ணன்கறதால திட்றதோட போச்சு! எங்கம்மாவா இருந்திருக்கணும். கரண்டி ஒடிஞ்சிருக்கும்.' என்று எண்ணிக் கொண்டாள்.

உடலோடு ஒட்டிய ஈரகுர்தா, உள்ளிருந்து உள்ளாடை முதற்கொண்டு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அம்மாவை நினைவூட்டியவன் நினைவும் சேர்ந்து வர, அவன்முன் தான் நின்ற தோற்றத்தை நினைத்தவளுக்கு, முதன்முதலாக கன்னம் செம்மை பூசியது.

'இனி கண்ணன் முகத்தை எப்படி நேருக்குநேர் பார்ப்பது?’ என்று நினைத்தவளுக்கு, அப்பொழுது தான் அவனின் உரிமையாக ஒருமைக்குத் தாவிய அழைப்பு நினைவுக்கு வந்தது. 

'கோபம் வந்தால் ஐயா விஸ்வாமித்திரர் போல!' என்று எண்ணியவள், உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

கண்ணன் வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்து விட்டு, மீண்டும் கடைக்கு கிளம்ப, வெளியே வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

இவனுமே அவளைத் திட்டியதை நினைத்து, வருத்தப்பட்டு கொண்டிருந்தான். 'இப்பத்தான் கொஞ்சங்கொஞ்சமா அவங்க பெத்தவங்க இழப்பிலிருந்து வெளியே வர்றா... அதுவும்‌ இந்தப் பிள்ளைகளோடு இருக்கும் போது மட்டும்! அதென்னமோ அந்தப் பக்கத்து மாடிக்காரன் பார்வையைப் பாரத்தால் மட்டும் நிதானம் தப்பி விடுகிறது. கொஞ்சம் பொறுமையா‌ சொல்லியிருக்கலாம்,' என்று நினைத்துக் கொண்டே வர, அவளின் முகத்திருப்பல் சங்கடத்தை உண்டு பண்ணியது.

"சாரி திவ்யா! நான்‌ ஏதோ கோபத்துல, அவசரப்பட்டு திட்டிட்டேன். மனசுல எதுவும் வச்சுக்காதிங்க ப்ளீஸ்? இன்னும் சின்னபிள்ளையாவே இருக்கிங்க!" அதே‌ அன்னையின் வார்த்தைகள்.

"இனிமேல்‌ பாத்து நடந்துக்கறேன். நீங்களும் இப்படி மரியாதையா கூப்பிட வேண்டாம். திட்டும் போது கூப்பிட்ட மாதிரியே கூப்பிடுங்க. எங்கம்மா திட்ற மாதிரியே இருக்கு."

"அதுக்கென்ன? கூப்பிட்டா போச்சு. அப்படியே டெய்லி ரெண்டு திட்டும் கொடுக்கலாம். வாண்டடா வசவு கேக்கற ஆளு கிடைக்கிறது கஷ்டம்,” என்று கேலி போல் கூறியவன்,

"அதை முகத்தைப்‌ பாத்து சொல்லாம்ல. நீ முகத்தத் திருப்பிகிட்டு பேசறது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு." என்று ஒருமைக்கு தாவியபடி உரிமையாகப் பேசினான்.

"இல்ல! எப்படி உங்க முகத்தைப் பாக்கறதுனு..." என அவள் இழுக்க,

"ஏன் எப்பவும் போலத்தான்..." என்று ஏதோ கூற வந்தவன், அப்பொழுது தான் அவளின் தோற்றம் நினைவுக்கு வந்தது. இவன் உரக்கக் கத்தியதும், விழி விரியப் பார்த்தவளின் கண்களும், மூக்கின் நுனியில் சொட்டுவதற்குத் தாயாராகி நின்ற நீர்முத்தும், இதழ்க்கடையில் வழிந்து கழுத்திறங்கிய நீர் சென்ற பாதையைப் பார்த்தவன், கொடுத்து வைத்தது என்ற எண்ணத்துடன் சற்று பொறாமையும் வந்தது, அந்த ஒத்தச்சொட்டு நீர்த்திவளையின் மீது இப்பொழுதும்! 

அதே நினைவோடு மீண்டும் அவள் முகத்தை உற்றுக் கவனித்தான். நாணச்செம்மை பூசி, நாணி நின்றவளது முகம் பார்த்தவன் இதழ்கடையிலும் குறும் புன்னகை அவள் வெட்கத்திற்கு இணையாய்.

அவன் கண் நோக்கக் கூசியவள், அன்றிலிருந்து அவன் கண்களை மட்டுமே பார்த்தாள். தினமும் கல்லூரிக்குத் தயாராகி வெளிவருபவளின் பார்வை தேடுவது அவனைத்தான். அவனும் அதற்காகவே என்பதுபோல் வெளியே நிற்பான்.

அவன் கண்களில் திருப்தியைத் கண்ட பிறகே வெளியேறுவாள். இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பார்வை ஒற்றல். வார்த்தைகள் இருவருக்குமிடையே அவசியமற்ற ஒன்றாகிப் போனது. 

 வார்த்தை தேவையில்லை வாழும்

 காலம்வரை

 பாவை பார்வை மொழிபேசுமே

 நேற்று தேவையில்லை நாளை 

 தேவையில்லை 

 இன்று இந்த நொடி போதுமே, 

 வேர்இன்றி விதையின்ற

 விண்தூவும் மழையின்றி இதுஎன்ன

 இவன் தோட்டம் பூபூக்குதே 

என்று அவனும்,

 வாள்இன்றி போர்இன்றி 

 வலிக்கின்ற யுத்தமின்றி

 இது என்ன இவன் அன்பு எனை

 வெல்லுதே

 இதயம் முழுக்க இருக்கும்

 இந்த தயக்கம் எங்கு கொண்டு 

 நிறுத்தும்

 இதை அறிய எங்கு கிடைக்கும்

 விளக்கம்,

என்று அவளும்.

இருவரும் அதை காதல் என்ற நிலைக்கு கடத்த முற்படவில்லை. ஒருவர் மீது கொண்ட அக்கறையாக எண்ணிக் கொண்டனர். அவனின் கடந்த காலமே சில நிதர்சனங்களை ஏற்றுக் கொள்ள இருவருக்கும் தடையாக இருந்தது. இருந்தும் மனது சண்டித்தனம் செய்தது இருவருக்கும்.

இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு ஒருநாள், "கண்ணா! டாக்டர் நாராயணனைப் பார்க்கணும். முப்பதாம் நாள் கும்பிடு, வீடு மாத்துனதுனு நாள் தள்ளிகிட்டுப் போயிருச்சு!" என்று சண்முகம் கூற,

இப்பொழுதும் இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டது. ‘இப்படியே இருந்து விடவா?’ என்று அவனும், ‘கண்ணனாகவே இருந்து விடேன்!’ என்று அவளும் நயனமொழி கொண்டு விண்ணப்பம் அனுப்பினர்.

‘தான் யார்? எப்படிப்பட்டவன்? குடும்பம் எப்படிப்பட்டது?’ என்ற சிந்தனை அவனுக்கு!

அவளுக்கோ இவன் எப்படிப்பட்டவன் என்கிற சிந்தனையெல்லாம் இல்லை. பெண்மனம் அப்படித்தான்! மனதிற்கு பிடித்து விட்டால் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் ஆராயாது. ஆனால் வேறோருவர் உடமையாக அவனிருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அடுத்தநிலைக்கு தாவ முட்டுக்கட்டையாக இருந்தது.

உண்மையை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல், தொண்டையில் சிக்கிய முள்ளாக அவளுக்குள்ளும் பெரும் தவிப்புதான்! உயிர்வாதையை உயிரோடு அனுபவித்தாள் பெண்!

***