ninaikkatha neramethu - 24 books and stories free download online pdf in Tamil

நினைக்காத நேரமேது - 24

நினைவு-24

எல்லோர் முகத்திலும் ஆச்சரியத்தின் வெளிப்பாடு அப்பட்டமாகத் தெரிய, நொடிநேரம் பேசவும் மறந்தனர்.

"இவ்ளோ பெரிய ஆளுங்களா இருக்கீங்க... எப்படி என்னை இவ்வளவு நாளா தேடாம இருந்தீங்க?" என்று கண்ணன், தானாகவே முன்வந்து கேட்டான்.

"நாங்க உன்னை சூரத்துலயும், மும்பை, கோவானுல தேடிட்டு இருந்தோம். நீதான் நாடோடி மாதிரி அப்பப்ப‌ ரோட் டிரிப் போறவனாச்சே!" என்று மங்கையர்க்கரசி கூறினார்.

"அம்மா! நாங்க உங்களை எப்படி நம்புறது?" என்ற சண்முகம் கேள்விக்கு,

"சார்… கூகுள்ல போட்டாலே இவன் விபரம் வருமே! இளம் தொழிலதிபர்கள் லிஸ்ட்ல முதல் ஆளா இருப்பானே! நீங்க எப்படி கண்டுபிடிக்காம விட்டீங்க?" என்ற விஷவாவின் கேள்விக்கு,

"நாங்க, எங்க கண்ணனை இவ்ளோ பெரிய ஆளா எதிர்பாக்கல தம்பி." என்றார் லட்சுமி.

"இவன் கையில இருக்கிற மோதிரத்துல எஸ்.ஏ.னு லெட்டர்ஸ் இருக்கும். சத்யானந்தன் தான் அது. அவங்க அப்பா இறந்த பின்னாடி என்னோட மாங்கல்யத்துல செஞ்ச மோதிரம் அது." என்று மங்கையர்க்கரசி கூற, கண்ணன் தன் விரலைத் திருப்பி பார்த்தான். விபத்தின் போது இவனிடம் மிஞ்சியது இது மட்டும் தானே!

சண்முகமும் அதற்குப் பிறகு நடந்த அனைத்தும் கூற, தன் மகனுக்கு அம்னீசியா, தன்னையே தெரியாதவன், தாயை எப்படி கண்டு கொள்வான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதுவரை தன்னை தள்ளி வைத்துப் பார்த்த மகனின் நிலையை அறிந்தவர், எழுந்து சென்று மகனைக் கட்டிப்பிடித்து கதறி விட்டார்.

அன்னையாக அறிய முடியா விட்டாலும், ஒரு தாயின் கண்ணீர் அவனையும் இளக்கியது. அதற்குள் திவ்யா அனைவருக்கும் காஃபி எடுத்து வந்தாள்.

"ஆன்ட்டி! முதல்ல காஃபி குடிங்க! உங்க மகன்கிட்ட அப்புறமா நிதானமா உக்காந்து பேசுங்க... ரொம்ப டென்ஷனா இருக்கீங்க பாருங்க!" என்றவளை மகனை விட்டுவிட்டு திரும்பிப் பார்த்தார்.

"ஆக்சிடென்ட்ல இந்தப் பொண்ணைப் பெத்தவங்க தான் இறந்துட்டாங்களா?"

"ஆமாங்க! அது சம்பந்தமா ஹாஸ்பிடல் போனப்ப தான் நாங்க கண்ணனைப் பாத்தோம்." என்றார் சண்முகம்.

"இவங்க மட்டும் என்னைப் பாக்கலைன்னா, நான் இருந்திருக்க வேண்டிய இடமே வேற!" என்றான்.

அடுத்து மற்ற விபரங்களை பேசிக் கொண்டிருந்தவர்கள், அவனது சிகிச்சை பற்றியும், செய்ய வேண்டிய ஆப்ரேஷனைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.

"சத்யா கிளம்புடா... போலாம். உங்க தாத்தா உனக்கு என்ன ஆச்சோங்கற பயத்துல நெஞ்சுவலி வந்து கிடக்குறாருடா!" என்று மங்கையர்க்கரசி கூற, மறுகணம் அவனது கண்கள் திவ்யாவைத் தான் தேடியது. அங்கு அவளில்லை.

"விஷ்வா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." என்றான்.

"டேய் சத்யா! என்னடாயிது? மூனாம் மனுஷன் மாதிரி மரியாதை எல்லாம் கொடுக்குற!" என்றவனிடம்,

"சாரி… என்னால இவ்ளோ தான் நெருங்க முடியுது. கொஞ்சம் வாங்களேன் ப்ளீஸ்!"

"ப்ளீஸ் எல்லாம் வேணான்டா! எனக்கு யாரோ‌ பேசுற மாதிரி இருக்குடா!" என்றவனை வெளியே அழைத்து வந்தான் கண்ணன்.

"எனக்கு நீங்க எந்தளவுக்கு நெருக்கமான ஃப்ரெண்ட்?" என்றவனை வருத்தம் கலந்த பார்வை பார்த்த விஷ்வாவோ,

"அந்தக் காலத்து ஆளுங்க மாதிரி சொல்லணும்னா ஒரே‌ இலையில சாப்புட்டவங்கடானு சொல்லலாம். இந்தக் காலம் மாதிரினா, அவனுங்களாடா நீங்கனு கேக்குறளவுக்கு நெருக்கம்." என்று கூறியவனைப் பார்த்து சிரித்து விட்டான்.

"அப்படினா... சொல்லுங்க விஷ்வா! எனக்கு லவ்வர் இருக்காங்களா?" என்று பட்டென கேட்ட நண்பனை, கேள்வியாக விஷ்வா பார்க்க,

"நான் யாரையாவது லவ் பண்றேனா? ஏன்னா… வந்ததுல இருந்து தாத்தாவைப் பத்தி பேசுனாங்களே ஒழிய பொண்டாட்டி புள்ளைனு பேசல... அதனால எனக்கு  கல்யாணமாகலைனு தெரியுது. அதான்… அடுத்ததா லவ்‌ பண்றேனான்னு…" என்று அவன் இழுக்க,

"திவ்யாவை லவ் பண்றியா சத்யா?" சட்டென கேட்டான் விஷ்வா.

"ஆமாங்க... எப்படி கண்டுபிடிச்சீங்க!" என்றான் ஆச்சர்யமாக.

"வெத்தலைல மை போட்டு பார்த்தேன்." என்றவனிடம்,

"என்ன தெரிஞ்சுது?" சிரித்துக் கொண்டே கேட்டான் கண்ணன்.

"எங்க விஸ்வாமித்திரரும் செம்மயா காதல் பள்ளத்தாக்குல விழுந்திருக்காருனு தெரிஞ்சது." என்று‌ கூறி விட்டு விஷ்வா சிரிக்க, கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நிம்மதியில் உள்ளே சென்றான் திவ்யாவின் கண்ணன்.

***

"ஆன்ட்டி, தாத்தா கண்ணு முழிக்கட்டும். அப்புறமா அவர்கிட்ட சத்யாவைக் கூட்டிட்டுப் போகலாம். முதல்ல இவனோட ட்ரீட்மெண்ட் பத்தி என்னன்னு பார்ப்போம். இவனை இந்த நிலமையில தாத்தா பார்க்க வேண்டாம்." என்று விஷ்வா கூற,

"அதுவும் சரிதாம் ப்பா! அவரால தாங்க முடியாது." என்ற மங்கையர்க்கரசி, 

சண்முகத்திடம், "அண்ணா! இவன் ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொடுங்க! ஹாஸ்பிடல் போலாம்!" என்றார்.

தன் மகனை, இவ்வளவு தூரம் பாதுகாத்து வந்தவர்களுக்கு, இவ்வளவு நேரமாக கண்ணீராலும் வார்த்தைகளாலும் நன்றி கூறியவர் அவர்களை உறவு சொல்லியே அழைத்தார்.

"இதோ கொண்டு வர்றேன்மா! டாக்டரும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ஆப்ரேஷன் பண்ணனும்னு சொன்னார்." என்றவாறு திவ்யாவை அழைத்தார்.

"திவ்யா! கண்ணனோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொண்டாம்மா!"

"இதோ எடுத்துட்டு வர்றேன் அங்கிள்!" என்றவள், ரிப்போர்ட்ஸ் அடங்கிய ஃபைலைக் கொண்டு வந்து சண்முகத்திடம் கொடுத்தாள்.

இவர்கள் வந்ததில் இருந்தே கண்ணனும் அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். மயக்கத்திலும் முன்தினம் தன் பெயரை உச்சரித்தவள், இன்று இன்னும் அவன் பக்கம் பார்வையைக் கூடத் திருப்பவில்லை.

பெரியவர்கள் முன்னிலையில் அவனாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன்மீது கொண்ட நம்பிக்கை சிதைந்து விடுமோ என்ற பயம் ஒருபக்கம் அவனை வாட்டினாலும், காதல் கொண்ட மனமோ அவளின் முகச் சோர்விற்கான காரணத்தை தேடி அலைந்தது.

அடுத்து மங்கையர்க்கரசியோ சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல துரிதப்படுத்த, சண்முகம் திவ்யாவை அழைத்தார்.

"நீயும் வர்றியாம்மா?" என்றவரிடம்,

"இல்ல அங்கிள்! இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு." என்றவளை யோசனையாகப் பார்த்தான் அவளவன்.

இரு தினங்களுக்கு முன்தான், "இனி செமஸ்டர் ரிவிஷன் மட்டும் தான்." எனக் கூறியவளாயிற்றே! இந்த பொய்யை அவளிடம் எதிர்பார்க்கவில்லை.

"நீங்களும் வாங்க திவ்யா! ஆரம்பத்துல இருந்து நீங்கதானே கூட இருந்திருக்கீங்க!" என்று நண்பனின் முகவாட்டம் பார்த்துக் கூறிய விஷ்வாவிடம் மறுத்துப் பேச வாய்திறந்தவள்,

கையைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த, அவளவனின் உக்கிரப் பார்வையில், "சரிங்க விஷ்வா!" என்றாள் உள்வாங்கிய குரலில்.

டாக்டர் நாராயணனனின் காருண்யா மருத்துவமனை. கோவையின் சிறந்த மூளை சிகிச்சை நிபுணர் என்பதால் மங்கையர்க்கரசியும் வேறு மருத்துவமனை செல்ல எண்ணவில்லை. ஏற்கனவே அனைத்து டெஸ்ட்டுகளும் எடுத்திருந்தபடியால், அடுத்தகட்ட சிகிச்சையை ஆரம்பிக்கலாமென மருத்துவர் கூறினார்.

திவ்யாவும் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆனந்தன் அன்ட் க்ருப்ஸ் ஃபேமிலி என்று தெரிந்த பின், கிடைக்கும் மரியாதையும், கவனிப்பும் வெகுவாக மாறியிருந்தது.

அடுத்த இரண்டு நாட்களில் ஆப்ரேஷன் என முடிவு செய்யப்பட, மறுநாளே மருத்துவமனை வரவேண்டுமென‌ கூறப்பட்டது.

"ஆப்ரேஷனுக்கு பின்னால் பழையபடி ஞாபகம் வந்துருமா டாக்டர்?" என்ற மங்கையர்க்கரசியின் கேள்விக்கு,

"நான் ஏற்கனவே சொன்னது தான்‌ மேடம்! ஆக்சிடென்ட் பாதிப்பால வந்த அம்னீசியா, எப்ப க்யுராகும்னு சொல்ல முடியாது. தெரபி ட்ரீட்மென்ட்ல கொஞ்சம் மீட்டெடுக்கலாம். ஆப்ரேஷனுக்கு பிறகும் திரும்பலாம். பழைய ஞாபகம் வருமா… வந்தாலும் இப்ப இருக்கிற இடைப்பட்ட ஞாபகமும் நினைவிருக்குமானு கரெக்டா சொல்ல முடியாது மேடம்." என்ற மருத்துவரின் விளக்கத்தில்,

திவ்யா, கண்ணனைப் பார்த்த பார்வையில், அவனால்‌ எதையும் உணர முடியவில்லை. பார்வையை வைத்தே அவளின் மனவோட்டம் அறிந்தவன், இப்பொழுது அவளின் எண்ணவோட்டம் என்னவென்று அறிய முடியாமல் தவித்தான்.

"போகும் போதே சாப்பிட்டு போயிறலாம். ஏற்கனவே ரொம்ப லேட்டாயிருச்சு. ஆத்தாவை எல்லாம் போய் சிரமப்படுத்த வேண்டாம்." என்று கண்ணன் கூற அதன்படி ஒரு ஹோட்டலின் முன் கார் நின்றது.

அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தனர். ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் சற்று நேரத்தில் எடுத்து வரப்பட்டது. திவ்யா பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்க, கண்ணன் அவளையே கண்காணித்து கொண்டிருந்தான்.

சாப்பாட்டை கொறித்துக் கொண்டிருந்தவள் இலையை மூடிவிட்டு கைகழுவச் சென்றாள். அவனும் பின்னாலேயே எழுந்து சென்றான்.

குழாயைத் திருகி கை கழுவிக் கொண்டிருந்தவளின் பின்னால் அவன் நின்றிருப்பதை உணர்ந்தவளின் பார்வை எதிரிலிருந்த கண்ணாடியில் பதிந்தது. இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். விழிகளைத் தாழ்த்திக் கொண்டு வெளியே செல்லத் திரும்பியவளிடம்,

"தியா! மறுபடியும் காய்ச்சலடிக்குதா?" எனக் கேட்டான்.

"இல்ல…"

"அப்புறம் ஏன் டல்லா இருக்க? நான் யார்னு அடையாளம் தெரிஞ்சதுக்கான சந்தோஷம் உன் முகத்துல இல்லியே?"

"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... நீங்க உங்க குடும்பத்தோட சேரப் போறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்."

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அடுத்து ஆட்கள் வரவும் வெளியேறினர். அவள் தன் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என்பதைக் கவனித்தான். அனைவரும் வீடு திரும்பினர். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

"சத்யா! நம்ம வீட்டுக்கு போலாமாப்பா? தாத்தாவையும் போய்ப் பாக்கணும்." என்று மங்கையர்க்கரசி கூறினார்.

அனைவர் முகத்திலும் சந்தோஷம் தென்பட்டாலும் சட்டென்ற‌ பிரிவு சற்று கவலை கொடுத்தது அனைவருக்கும்!

"அம்மா! நீங்க போய் தாத்தாவைப் பாருங்க! எப்படியும் உங்க கூடத்தானே வரணும். ஆப்ரேஷனுக்கு போற வரைக்கும் நான் இங்கயே இருக்கேன். இடையில ஒருநாள் தானே?" என்றான். அவனுக்கும் திவ்யாவிடம் பேச வேண்டியிருந்தது.

"சரி சத்யா! அம்மாவையும், தாத்தாவையும் நான் பாத்துக்கிறேன்." என்ற விஷ்வா, மங்கையர்க்கரசியிடம் திரும்பி, 

"ஒருநாள் தானே ஆன்ட்டி! இன்னும் அவனால நம்மகிட்ட ஒட்ட முடியல. அவங்களுக்கும் சட்டுனு நம்மகூட வந்துட்டா கஷ்டமாயிருக்கும். இங்கேயிருந்தே ஹாஸ்பிடல் வரட்டும். நாம போய் மத்த ஏற்பாட்டெல்லாம் பாப்போம்!" என்று கூறவும் மங்கையர்க்கரசியும் சம்மதிக்க வேண்டியதாயிற்று. இருவரும் கிளம்பிச் சென்றனர்.

"அண்ணா! பெரிய ஆளுதாண்ணா நீங்க! இன்னமும் எங்களால நம்ப முடியல!" பள்ளி விட்டு மாலையில் மாடிக்கு வந்த சதீஷ், கண்ணனிடம் கேட்க,

"அட... நீ வேற ஏன்டா? நானே உங்க அக்கா மனசுல என்ன ஓடுதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கேன். அவங்கெல்லாம் வந்துட்டு போனதுல இருந்து இன்னும் என்கிட்ட பேசவே இல்லடா!" என்று சதீஷிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

"உங்களைப் பிரியப் போறோம்னு கவலையா இருக்கும்ணா!"

"நான் எங்கடா போகப் போறேன்? இதே கோயம்புத்தூர் தானேடா?"

"நான் வேணும்னா அக்காவைக் கூப்பிடட்டுங்களா ண்ணா?"

மாடியறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சதீஷ், கண்ணனிடம் கூற, "வேணான்டா! நானே பாத்துக்கறேன். சின்னப் பயலுகளை எல்லாம் இதுல சேக்கக் கூடாதுடா!"

"இப்பதான் நான் சின்னப் பையன்கறது உங்களுக்கு தெரியுதா? இவ்ளோ நேரம் புலம்பும் போது தெரியலிங்களா ண்ணா?" என்றவனிடம்,

"என்னடா பண்றது? உங்க அக்கா என்னைய இப்படி புலம்ப வைக்கிறாடா!" என்று சலித்துக் கொண்டான்.

"அவங்க என்னத்தை நினைச்சு குழம்பிகிட்டு இருக்காங்களோ? நீங்க இப்படியே புலம்பிகிட்டிருங்க! நான் கீழே போய் அம்மாவுக்கு எதாவது ஹெல்ப் வேணுமான்னு பாக்குறேன்! உங்ககூட சேர்ந்தா நான் அரைகிறுக்கன் ஆகிடுவேன்!" என்று சந்தடி சாக்கில் கேலி பேசிவிட்டு கீழே இறங்கிப் போனான் சதீஷ்.