Dark and Light - 1 in Tamil Adventure Stories by Holy spirit books and stories PDF | இருளும் ஒளியும் - 1

Featured Books
Categories
Share

இருளும் ஒளியும் - 1

பூமியின் தெற்கு திசை மனிதர்கள் உள்நுழைய முடியாத அடர்ந்த காடு, கருங்காடு என்று பெயர். அது தீய சக்திகளின் கோட்டை கூடாரமாக உள்ளது, மரம், செடி கொடிகளால் செழிப்புற்று இருக்கிறது எங்கு பார்த்தாலும் புதரும், பகல்வேளையே இரவு போன்று காட்சியளிக்கும் அடர்ந்த காடாகும்,

கொடிய மிருகங்களும, தீய ஜீன் சக்திகளும், விஷம் நிறைந்த பாம்புகளும், வேட்டையாடும் பறவைகளும் மட்டுமே அங்கு வாழ முடிகிறது. காட்டைச் சுற்றி எல்லைப்புறத்தில் மலைகளால் சூழப்பட்டு அதற்கு அப்பாலே தேசங்கள் இருந்தனர்.

இக்காட்டில் உள்ள மிருகங்களுக்கும், புதை குழிகளுக்கும், புதர்களுக்கும் மற்றும் தீய சக்திகளுக்கும் பயந்து எவரும் இக்காட்டினுள் வருவதில்லை, மீறி வருபவர்களுக்கு ஏதாவது ஒரு விபரீதத்தில் மரணத்தை ஏற்படுத்தி விடும்.

அவர்களின் உடலும் கிடைப்பதில்லை, இறந்தவர்களை தேடி கண்டடைய காட்டினுள் ஒருவரும் நுழைவதும் இல்லை. விறகு வெட்டி வருபவர்கள்,  காட்டினுள் மூலிகைச் செடி பறிப்பவர்கள் மற்றும் பழங்கள் சாம்பிராணிகளை சேகரிக்கும் வைத்தியர்கள் என தேசத்தை ஒட்டி உள்ள மலையின் ஒரு பக்க உச்சிக்கு செல்வார்களே தவிர மறுபக்கம் இறங்குவதில்லை.

பௌர்ணமி நிலவின் வெளிச்சம் காட்டு மரங்களின் மேல்புறம் இருக்க, கீழ்புறத்தில் மரக்கிளையின் இடையில் நிலவின் வெளிச்சம் ஊடுருவி ஆழ்ந்த வழிபாட்டில் இருந்த ஒரு கொடூர உருவம் கொண்ட ஜந்துவின் மீது பட்டு கொண்டு இருந்தது.

மனித உருவிற்கு ஒத்த உருவமாக இருந்தாலும், தலையில் இரு கொம்புடனும் அதற்கு மேல் கிரீட அலங்காரத்துடன் மிகுந்த கருமை நிறத்தில் வயிறு ஒட்டிய நிலையில், கை கால் நீளமான உருவ அமைப்புடன் பிரம்மாண்டமாக பத்மாசனத்தில் அமர்ந்து மௌன வழிபாட்டில்  இருந்தது.

மயான அமைதி நிலவிய அந்தக் காட்டினில் கொடூர உருவத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இருந்த அந்த இரட்டைக் கொம்பனின் மூச்சு ஓசை மட்டும் பிரம்மாண்டமாக ஒழித்தது.

ஓசையை கேட்டு இரவு பறவைகளும், வேட்டையாடும் விலங்குகளும் தங்கள் ஒலியை எழுப்பாமல் பயத்தில் நடுங்கி, அதன்அதன் தன் இருப்பிடத்தில் பதுங்கி கொண்டது.

ஆழ்ந்த வழிபாட்டில் இருந்த அந்த ஜந்து பார்ப்பதற்கு தீயசக்தி என்று விளங்கிற்று. அதனின் தவவலிமை கூடக் கூட காட்டுக்குள் இருக்கும் மிருகங்கள் எல்லாம் மதிக்கெட்டு புத்திகெட்டு போயின.

தவத்திற்கு இடையூறு செய்யும் வகையில் அந்த கொடூர உருவத்தின் மேல்நோக்கி பறந்த சிறுசிறு பூச்சிகளும், பறவைகளும், அதன் அருகே சென்ற மிருகங்களும் எரிந்து சாம்பலாகின.

தவத்தின் ஒலி ஓசை கடுமையாக ஒலிக்க காடு அதிரத் தொடங்கியது.

வான்புறத்தில் பௌர்ணமி நிலவொளியை ரசித்த வண்ணம் வெட்டவெளி தன்னில் வெண்ணிற ஆடை உடுத்திய தேவதைகள் வலம் வந்து கொண்டிருந்த வேளை அது, இத்தவத்தின் ஆற்றல் வானில் பறக்கும் தேவதைகளையும் பாதித்தது.

மேல்புறமாக வந்த நான்கு தேவதைகளின் பெயர்கள் மங்களா, கலிக்,  மௌலா, சாலும் ஆகும்.  இவர்கள் பௌர்ணமி நாளிலும் அம்மாவாசை நாளிலும் வளம் வருவார்கள். அப்போது மந்திர வழிபாட்டில் இருப்பவர்களுக்கு சித்தி தரக்கூடியவர்கள்.

அதில் மங்களா மற்ற தேவதைகளிடம், " என்ன இது பூமியில் இக்காட்டில் மட்டும் மேல்புறமாக பறந்து செல்ல முடியவில்லை. அவ்வாறு இந்த காட்டினுள் என்ன நடக்கிறது. இது ஒரு தீய சக்தியின் வேலை என்று தெரிகிறது. இருப்பினும் இவ்வளவு பிரம்மாண்ட சக்தி எவ்வாறு அதற்கு கிட்டியது. 'வாருங்கள் தோழிகளே' நாம் கீழ் சென்று காட்டினுள் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்"  என்றாள்.

வானவர்களின் முதன்மையானவராக இருக்கக் கூடிய கேபிரிலை கண்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்று வரங்களைப் பெற்ற மௌலா அவளிடம், "மங்களா, இது கடுமையான ஆபத்து நிறைந்த பகுதியாக தெரிகிறது.  மேலும் வானவர் தலைவரும் வணக்கத்திற்குரியவருமான கேப்ரில் அவர்கள் சொன்னது போல தீய சக்தியின் வாரிசு பூமியில் பிறக்கப் போகிறது என்று தோன்றுகிறது"

அதைக் கேட்ட சாலும், "மங்களா மேல்புறமாகவே நம்மால் பறக்க முடியவில்லை. கீழ்ப்புறம் எவ்வாறு செல்லமுடியும் சற்று யோசித்துப் பார். இதைவிட  அங்கு பயங்கர ஆபத்துக்கள் காத்துக் கொண்டு இருக்கலாம். நமது நிலமையே இவ்வாறு என்றால் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களின் நிலைமை மோசம் தான்."

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கலிக் தேவதை அவர்களிடம், " இதை பார்த்துவிட்டு நாம் பயந்து ஓடுவதா? நாம் பௌர்ணமி நிலஒளியின் காவல்காரர்கள். பூமியில் அதிகாரம் உடையவர்கள். தீய சக்தியை அழிப்பதும் நல்லோரை காப்பதும் நமது கடமை, வாருங்கள், அது என்னவென்று ஒரு கைப்பார்த்து விடலாம்."

"வேண்டாம் கலிக், நான் இதைப் பற்றி முன்பே கேள்விப்பட்டு உள்ளேன். அதுவும் வானவர் கேப்ரியலே கூறி உள்ளார், இதை தடுப்பதாக இருந்தால் அவரே கூறி இருப்பார் அல்லவா? ! நடப்பது விதிப்படியாகும். இதை தடுப்பது ஒருவராலும் இயலாது." என்றால் மௌலா.

"என்னால் அவ்வாறெல்லாம் பார்த்துக் கொண்டு விட்டுச் செல்ல முடியாது. நான் கீழ் இறங்கி அத்தீய சக்தியின் ஆற்றலை எனது தேவதை சக்தியை கொண்டு அடக்கி அழிப்பேன்," என்று கூறிய வண்ணம் கீழ இறங்கினால் கலிக், வேறு வழியில்லாமல் மற்ற தேவதைகளும் பின் சென்றனர்.

காட்டின் மேல்புறத்தில் அவர்களால் செல்ல முடியாததால் காட்டின் ஓரமாக நான்கு தேவதைகளும் இறங்கி, பூமியின் நடைபாதையில் காட்டின் உள்ளே நடந்து சென்றனர்.

அதில் மௌலா தேவதை பூமியில் தனது கையை வைத்து இப்பகுதியில் என்ன நடக்கிறது என்று தனது கண்களை மேல் தூக்கி ஞான திருஷ்டியில் அதைக் காண நினைத்தால்,

அப்பொழுது அந்த கொடூர உருவம் பத்மாசனத்தில் அமர்ந்து வழிபட்டுக் கொண்டிருப்பதையும் அதன் மூச்சு ஆற்றலின் சக்தி காடு முழுவதும் பரவி நிற்பதை கண்டு அதிர்ந்து போனாள், பயத்தால் அவளுக்கு பேச்சே வரவில்லை. 

மற்ற தேவதைகள், "என்ன ஆயிற்று சொல் மௌலா " என்றதும்,

அவள் அவர்களிடம் சொல்லால் தெரிவிக்காமல் அவர்களையும் தங்கள் கையை வைத்து ஞானத்தில் அறிந்து கொள்ளும்படி செய்கையில் காட்டினாள், பிறகு  மூன்று தேவதைகளும் தரையில் கையை வைத்து தங்கள் ஞான திருஷ்டியில் அதை உணர்ந்தனர்.

நான்கு பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், கலிக் விடுவதாக இல்லை. இந்த காட்டின் உள் பிரவேசிக்கவே ஆசைப்பட்டாள். அது 'என்னதான் செய்துவிடும் பார்ப்போம்!' என்ற எண்ணம் கொண்ட அவளுடன் இருந்த மௌலா எவ்வளவு கூறியும் கேட்காமல் அவள் செல்ல தயாரானாள்,

அவளை தனிமையில் விட்டு செல்ல மற்றவர்களுக்கு விருப்பமில்லை. வேறு வழியில்லாமல் அவர்களும் அவளுடனே சென்றனர்.

காட்டின் எல்லை பகுதியில் இருந்து நான்கு தேவதைகளும் உள் நுழைகிறார்கள். அவர்களை கொடிய மிருகங்கள் சூழ்ந்தன. தேவதைகள் தங்கள் வாயில் நவின்ற மந்திரத்தால் அவைகள் அவ்விடத்தை விட்டு நகர முடியாமல் மயங்கி விழுந்தன. தேவதைகள் முன்னோக்கிச் சென்றார்கள்.

தேவதைகள் கொடிய மிருகங்களை மயக்கியதையும், காட்டினுள் பிரவேசிக்க இருப்பதையும் அறிந்த கொடிய மிருகங்களின் தலைவனான பல்வாடா என்ற பெயர் கொண்ட சிங்கம், அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தது. அதனுடன் பசுவானா என்ற பறவைகளின் தலைவனான கழுகும் இருந்தது.

காடு முழுவதும் இருளும் அமைதியும் சூழ மூச்சுக்காற்றின் ஓசை வெகு தொலைவில் கேட்க, இவர்கள் வரும் பரப்பில் ஒலிகள் பரவின, தேவதைகளின் உடல் ஒளியானது அவ்விருள் காட்டிற்கு  குறிப்பிட்ட தொலைவிற்கு, வெளிச்சத்தை கொடுத்தது.

பகலிலும் கூட வெளிச்சம் காணாத இக்காட்டில் ரா வேளையில் இவ்வாறு வெளிச்சம் தெரிவது அனைத்து மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், தீய சக்திகளுக்கும் பார்வையை தூண்டின.

இவர்கள் உள்பிரவேசிப்பதை உணர்ந்ததும் மண்ணில் புதையுண்டு இருந்த தீய ஜின்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டன.

இரட்டைக் கொம்பும் கிரீடமும் அணிந்தவனின் பெருந்தவமானது கலைந்து விடக்கூடாது என்று அதன் சேவகர்கள் காட்டின் எல்லை பகுதியில் மண்ணில் புதையுண்டு மறைவாக இருந்தனர். எதையும் உட் பிரவேசிக்க விடாமல் இதுவரை பாதுகாத்து நின்றனர்.

தவ வலிமை கூடக் கூட அக்காவலாளிகளின் தீய ஆற்றலும் பெருகிக்கொண்டே போனது. மண்ணிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்பட்டது தன் மீது படிந்த மண்ணை உதறி ஒவ்வொன்றும் தாக்குவதற்கு  தயாரானது.

தன் தலைவனின் தவத்தை பாதுகாக்கும் அத்தீய சக்தி கூட்டத்திற்கு தளபதியாக பகர் ஜின் என்ற  ஒருவன் இருந்தான், அந்த தீய சக்தி கூட்டங்களில் இவன் அதீத ஆற்றல் பெற்றவன்.

அந்தத் தலைமை ஜின்னான பகர்ஜின் மற்ற ஜின்களிடம், "யாரும் இவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம். இவர்களால் இத்தவத்தை கலைக்க ஒருபோதும் இயலாது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை" என்றது அந்த தலைவன் பகர் ஜின்.

தளபதியான பகர் ஜின்  கட்டளையை ஏற்று மற்ற ஜின்களெல்லாம் மீண்டும் தங்கள் உடலை மண்ணுக்குள் புதைத்தனர். அவர்கள் இவர்களை நோக்கி வருவதற்குள் தலைமை ஜின்னான பகர் ஜின் தன் உடலை மண்ணுக்குள் புதைத்து  கொண்டான்.

அந்த தேவதைகளின் மனதில் பயம் கலந்தாலும், இங்கு தீய ஜின் இருப்பதை உணர்ந்தபடியால் தனது ஆற்றலை பெருக்கிக் கொண்டு தாக்குதலுக்கும் தயாராக இருந்தார்கள், தேவதைகள் ஒருவருகொருவர் உற்று நோக்கி செய்கை வழி பேசிக் கொண்டார்கள்.

அந்த நான்கு தேவதைகளில் கலிக் என்பவளே முதன்மையாக சென்றாள், அக்கொடூர உருவத்தை நோக்கிச் செல்ல செல்ல அதனின் மூச்சின் சுவாசத்தின் ஓசையானது அவர்களின் காதில் வலுவாக விழத் தொடங்கியது. அவர்கள் மனம் பதபதைத்தது புத்தியும் பேதலித்தது நால்வரும் தடுமாற்றம் அடைந்தனர்.

முதல் தேவதையாக அடி எடுத்து வைத்து சென்ற கலிக் தேவதை மிகுந்த பாதிப்படைந்து தனது கைகளை தலையில் வைத்தபடி அமர்ந்து விட்டாள். பின்னோக்கி வந்த மூன்று தேவதைகளும் இதற்கு அப்பால் சென்றால் நிச்சயமாக நமக்கு  விளைவு ஏற்படும் என்பதை உணர்ந்து நின்று விட்டார்கள்.

அவர்கள் கலிக் தேவதையை திரும்பி வருமாறு அழைத்தார்கள். அந்த மூன்று தேவதைகளின் அழைப்பும் கலிக் தேவதையின் காதில் விழவில்லை, அந்த மூன்று தேவதைகளும், கலிக் தேவதையை காக்க முற்படும் போது அவர்களால் ஒரு அடி கூட முன் நகர முடியவில்லை.

காற்றில் கலந்திருந்த தீய சக்தியின் தவ வலிமை அவர்களை கட்டுப்படுத்தியது, கலிக் தேவதை மட்டும் தனது மன வலிமையால் அதை தாங்கிக் கொண்டு முன்னோக்கிச் சென்றாள்.

மீதமுள்ள மூன்று தேவதைகளும் கலிக்  தேவதையை "நில், கலிக்  மேற்கொண்டு செல்ல வேண்டாம், நாங்கள் சொல்வதைக் கேள், நாங்கள் சொல்வது உன் காதில் விழுகிறதா இல்லையா" என்று சத்தமிட்டும் அவள் நிற்கவில்லை .

தொடரும்,,,,,,,,,